ஊரடங்கு சமயங்களில் தாறுமாறாக எகிறிய ஆட்டோ கட்டணம்! அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சைலேந்திரபாபு!

Photo of author

By Sakthi

முழுமையான ஊரடங்கு தினங்களில் வெளியூர் சென்று திரும்புவதற்கு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் அனைத்து மாநகர காவல்துறை ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் தெரிவித்திருப்பதாவது, இந்த மாதம் 9 மற்றும் 16 உள்ளிட்ட தேதிகளில் அனுசரிக்கப்பட்ட இரு முழுமையான ஊரடங்கு தினங்களிலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.

பொதுமக்களில் சிலர் பொறுப்பற்ற முறையில் காவலர்களிடம் நடந்துகொண்ட சமயத்திலும், பொதுமக்களில் ஒரு சிலர் காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய போதும், நம்முடைய காவல்துறையை சார்ந்தவர்கள் துறைக்கு உரிய பொறுப்புடன், பொறுமையுடனும், மனிதாபிமானத்துடனும், பணியாற்றியிருக்கிறார்கள் அதற்காக என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கின்ற 2 முழுமையான ஊரடங்கு தினங்களிலும் 9ம் தேதி அன்று விதி மீறலுக்காக 19,962 வழக்குகளும், 16 ஆம் தேதி அன்று 14, 951 வழக்குகளும், பதிவு செய்யப்பட்டு ஒட்டுமொத்தமாக 78.34 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என குறிப்பிட்டிருக்கிறார் சைலேந்திரபாபு.

முழு ஊரடங்கு தினங்களில் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்தவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்வதற்கு தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்டவை கிடைக்காமல் அவதிக்குள்ளானதாகவும், ஆட்டோ பயணத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், புகார்கள் வந்தது.

ஆகவே எதிர்வரும் ஊரடங்கு தினங்களில் இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் பேருந்து நிலையம் மற்றும் தொடர்வண்டி நிலையங்களில் இருந்து வீடு திரும்புவதற்கு நியாயமான அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.