தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை

0
253
#image_title

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை

தமிழக அரசு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.

தமிழக அரசு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆம்னி பேருந்துகளுக்கு “மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 88 (9)இன் படி சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்ல ஏ.ஐ.டி.பி எனப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆம்னி பேருந்துகள் செயல்படாமல் பயணிகள் பேருந்துகள் போல் மின்னணு முன்பதிவு நிறுவனங்கள் மூலம் பயண சீட்டுகள் வழங்கி கட்டணத்தை வசூலித்து வருகின்றன.

இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் நிபந்தனைகளை மீறுவதினால் மாநில அரசிற்கு வெகுவான வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. எனவே இதனை சரிபடுத்தும் நோக்கில் நாளை முதல் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும். மேலும் அதில் சுற்றுலா பயணிகளின் புறப்படும் இடம் மற்றும் சேருமிடம் பற்றிய விவரங்கள் தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கான பயண விவரங்கள் வைத்திருப்பது அவசியம். மேலும் அதிகாரிகளின் தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் அதனை சமர்ப்பிக்க தயாராக இருக்க வேண்டும்.

மேலும் மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் தமிழகத்திற்குள் பயணித்த விவரங்கள் சுற்றுலா முடிவுறும் போது வெளியேறும் விவரம் ஆகியவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் .இந்த நிபந்தனைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு முன்னதாக அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறு பதிவு செய்வதற்கு மூன்று முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் 652 அனுமதி சீட்டுகள் பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே தமிழகத்தில் மறுப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் டி.என் என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு தமிழகத்தில் இயங்க அனுமதிச்சீட்டும் பெற்றுள்ளன. மீதமுள்ள வாகனங்கள் விதிகளை மீறி வருகின்றன. எனவே 14-ஆம் தேதி முதல் வெளி மாநில பதிவு மற்றும் அனுமதி சீட்டு பெறாமல் உள்ள வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது என அதிரடி உத்தரவு இடப்பட்டுள்ளது.