திவாலானது இலங்கை! வட்டி கூட கட்ட முடியாத பரிதாப நிலை!

Photo of author

By Sakthi

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக, இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது.

இதன் காரணமாக, பொதுமக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதிக்க தொடங்கினார்கள். அதோடு இலங்கையின் அரசியல்வாதிகள் பலரும் பொதுமக்களால் தாக்கப்பட்டனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜபக்ஷேவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது அங்கே பரபரப்பை கிளப்பியது.

பொதுமக்களின் நெருக்கடி காரணமாக, பதவி விலகிய அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் திடீரென்று அவர் குடும்பத்துடன் தலைமறைவானார்.

இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அவரையும் இலங்கை மக்கள் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில், இலங்கை அரசு முதன்முறையாக கூடுதல் அவகாசத்திற்கு பிறகும்கூட அந்நிய கடன் பத்திரங்களுக்கு வட்டி தொகையைக் கூட திரும்ப செலுத்த முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. நம்முடைய அண்டை நாடான இலங்கையில் நோய் தொற்று பரவல் காரணமாக, சுற்றுலா வருவாய் பாதிக்கப்பட்டு அந்நிய செலாவணி வரத்து குறைந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அதோடு உணவு மருந்துகள் எரிபொருள் உள்ளிட்ட அவற்றின் பற்றாக்குறையால் விலைவாசி கடுமையாக அதிகரித்திருக்கிறது. பணவீக்கம் 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. ஆகவே கொதித்தெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இலங்கையில் கடன் மற்றும் வட்டி உள்ளிட்டவை சேர்ந்து 3,82000 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து கடன் தொகையை திரும்பக் கொடுப்பது நிறுத்தி வைக்கப்படுவதாக இலங்கை அரசு சென்ற மாதம் அறிவித்தது.

அதேநேரம் ஒரு சில முக்கிய கடன்களுக்கான வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனாலும் இந்த மாதம் 2 அரசு கடன் பத்திரங்களுக்கு 585 கோடி ரூபாய் வட்டி தொகையை தர இலங்கை அரசு தவறிவிட்டது. இதனை தொடர்ந்து வழங்கப்பட்ட 40 நாட்கள் அவகாசமும் நேற்று முன்தினம் முடிவடைந்தது.

ஆகவே இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நேற்று தெரிவித்ததாவது, இலங்கை அரசு கடன் பத்திரங்கள் வட்டியை செலுத்த தவறிவிட்டது. இதற்கு வெவ்வேறு தொழில்நுட்ப வார்த்தைகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்படலாம்.

பன்னாட்டு நிதியத்திடம் 2 முதல் 4 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் உதவி கேட்டிருக்கிறோம்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது அதுவரையில் எங்களால் கடன் வட்டியை திரும்ப கொடுக்க முடியாது, இவ்வாறு அவர் உரையாற்றினார். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்த நூற்றாண்டில் இலங்கை தான் முதன்முதலாக திவாலான நிலை சந்தித்திருக்கிறது.