ADMK TVK: தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவு பரபரப்பாக இந்த முறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியது தான். இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானதிலிருந்தே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மேலும், தவெகவிற்கும்-திமுகவிற்கும் தான் போட்டி என்று கூறியது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் திராவிட கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என்று அனைவரும் எதிர் பார்த்தனர். அந்த எதிர் பார்ப்புக்கு ஏற்றவாறு அதிமுகவின் நகர்வும் இருந்தது. இதனை உடைத்தெறியும் விதமாக நேற்று நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைமையில் கூட்டணி, கூட்டணி முடிவு விஜய் கையில் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விஜய் அதிமுக கூட்டணிக்கு சிகப்பு கோடி காட்டியதால் அதிமுக தலைமை தொடங்கி தொண்டன் வரை ஏமாற்றத்தில் இருந்தனர்.
மேலும் அதிமுக அமைச்சர்களிடம் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது கூட அவர்கள் அதற்கு பதிலளிக்க மறுத்தனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து பேசியுள்ளார். விஜய் குறித்து கருத்து தெரிவித்த அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விஜய் காணாமல் போய் விடுவார். அவரால் படம் கூட நடிக்க முடியாது. தியேட்டர்கள் எல்லாம் திமுக வசம் சென்று விடும் என்றும், எம்ஜிஆர் முடிவெடுத்து செயல்பட்டதை போல விஜய்யும் செயல்பட வேண்டுமென கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக கூட்டணிக்கு நோ சொல்லிய விஜய்யை மீண்டும் மீண்டும் கூட்டணிக்கு இழுக்க அதிமுக முயற்சி செய்வதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

