பொதுவாக அனைவரது வீட்டிலுமே ஏதேனும் ஒரு செடியை வளர்த்து வருவார்கள். அது அழகிற்காகவும் இருக்கலாம் அல்லது வாஸ்துவிற்காகவும் இருக்கலாம். பல விதமான செடிகளை வளர்த்து அதனை பராமரித்து வரும் பொழுது மன அமைதி, மன நிம்மதி போன்றவை ஏற்படும். இயற்கையின் பசுமை நிறத்தை பார்க்கும் பொழுதே அனைவரது உள்ளத்திலும் ஒரு அமைதி ஏற்பட்டுவிடும்.
இதற்காகத் தான் பெரும்பாலான வீடுகளில் பலவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று வாஸ்துவிற்காகவும் என பலவிதமான செடிகளை வளர்த்து வருகின்றனர். வாஸ்துவிற்கு எந்தெந்த செடிகளை வளர்க்க வேண்டும் என்று தெரிந்தவர்கள், அந்த செடிகளை எவ்வாறு வைக்க வேண்டும்? எவ்வாறு பராமரிக்க வேண்டும்? என்பதை தெரியாமல் இருக்கிறார்கள்.
கண் திருஷ்டியை நீங்க வேண்டும், மகாலட்சுமியின் வரவு வேண்டும், பணவரவு ஏற்பட வேண்டும், குடும்ப அமைதி வேண்டும் என எண்ணி பலவிதமான வாஸ்து செடிகளை மக்கள் வளர்த்து வருகின்றனர். அத்தகைய வாஸ்து செடிகளுள் ஒன்றான வெற்றிலை கொடியை எப்படி வைத்தால் பண வரவு ஏற்படும் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காண்போம்.
வெற்றிலை கொடி என்பது வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி பணவரவு ஏற்பட வேண்டும் என்பதற்காக வளர்க்கப்படுகிறது. அத்தகைய வெற்றிலை செடியை வைப்பதற்கு முன்பு அந்த இடத்தில் 3 ஐந்து ரூபாய் நாணயங்களையும், சிறிதளவு மஞ்சள் குங்குமத்தையும் போட்டு அதன் பிறகு தான் வெற்றிலை கொடியை நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு வெற்றிலை கொடியை நடவு செய்து, தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வர வேண்டும். வெற்றிலை கொடி வளர வளர வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி பணவரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம். வெற்றிலை கொடி என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. எனவே இந்த செடியை நடவு செய்வதற்கு முன்பு இந்த தாந்திரீக பரிகாரம் என்பது மிகவும் அவசியம்.
வெற்றிலை கொடியை ஒரு தொட்டியில் நடவு செய்தாலும் சரி, நிலத்தில் நடவு செய்தாலும் சரி இந்த முறையில் தான் நடவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் வாஸ்து பிரச்சனைகள் நீங்கி பணவரவு ஏற்படும்.