முருகனுக்கான நாமங்கள் பல இருந்தாலும், அதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது இந்த கந்த சஷ்டி கவசம். நாம் அனைவரும் அறிந்த இந்த கந்த சஷ்டி கவசமானது திருச்செந்தூர் முருகனை குறிப்பிடும் கவசம் ஆகும். இதேபோன்று முருகனின் ஆறுபடை வீட்டிற்கும் 6 கவசங்கள் உள்ளன. இந்த ஆறு கவசங்களையும் எழுதியவர் பாலதேவராயன் ஆவார்.
இந்த கந்த சஷ்டி கவசத்தை பலரும் சரியான முறையில் படிப்பது கிடையாது. ஒரு சிலர் இந்த கந்த சஷ்டி கவசத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் படிக்க முடியாது. அதே போன்று ஒரு சிலரால் தொடர்ந்து 48 நாட்கள் இந்த கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் படிக்க முடியாது.
படிக்கும் பொழுது பல்வேறு தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.இந்த கந்த சஷ்டி கவசத்தை எல்லோராலும் எளிமையாக படித்து விட முடியாது. ஆனால் கஷ்டப்பட்டு, பல இடையூறுகளையும் தாண்டி இந்த கந்த சஷ்டி கவசத்தை படித்து விட்டோம் என்றால், பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். அப்படி இந்த கந்த சஷ்டி கவசத்தை நாம் தொடர்ந்து படித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
இதனைப் படிக்கும் பொழுது முருகனின் திருவுருவப்படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஒன்றை ஏற்றி வைத்து, ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தை வைத்து விட்டு, புத்தகத்தைப் பார்த்தே நமக்கு மனப்பாடம் ஆகும் வரையிலும் படிக்கலாம். அவசர அவசரமாக படிக்காமல், நிறுத்தி நிதானமாக பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.
இந்த கந்த சஷ்டி கவசம் மட்டுமல்லாமல், எந்த ஒரு நாமத்தையும் நாம் படிக்கும் பொழுது நிறுத்தி நிதானமாக, பொருள் உணர்ந்து படிக்கும் பொழுது மட்டுமே அதற்கான பலன் நமக்கு கிடைக்கும்.
கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்:
1.முருகப்பெருமானை எங்கு நினைத்தாலும் அந்த இடத்திலே முருகப்பெருமானை எழுந்தருள செய்கின்ற ஆற்றல் இந்த கந்த சஷ்டி கவசத்திற்கு உண்டு. முருகனை வரவழைக்கும் தாரக மந்திரமாக இந்த கந்த சஷ்டி கவசம் விளங்குகிறது.
2. இது உச்சம் தலை முதல் உள்ளம் கால் வரை ஒரு கவசமாக நமக்கு திகழ்கிறது.
3. பில்லி, சூனியம், ஏவல், செய்வினை இது போன்ற எந்த பிரச்சினையாக இருந்தாலும் இந்த கந்த சஷ்டி கவசம் நம்மிடம் எதையும் அணுக விடாது.
4. எமதூதர்களை நம்மிடம் நெருங்க விடாத கவசமும் இந்த கந்த சஷ்டி கவசம் தான்.
5. விலங்குகள் மற்றும் விஷ ஜந்துக்களின் மீது நமக்கு இருக்கும் பயத்தை இந்த கந்த சஷ்டி கவசம் போக்கிவிடும். நமது உடலில் விஷங்கள் இருந்தாலும் அதனை இந்த கவசம் நீக்கிவிடும்.
6. தீராத நோய்களையும் தீர்த்துக் கொடுக்கும் வல்லமை இந்த கந்த சஷ்டி கவசத்திற்கு உண்டு. எவர் ஒருத்தர் இந்த கந்த சஷ்டி கவசத்தை 48 நாட்கள் தொடர்ந்து அவர்களது நோய் தீர வேண்டும் என்று பாராயணம் செய்கிறார்களோ, அது எந்தவித நோயாக இருந்தாலும் தீர்ந்து விடும்.
7. இந்த உலக பற்றுகளை ஒருவர் நீக்கிக் கொள்ளவும் இந்த கந்த சஷ்டி கவசம் உதவுகிறது. அதாவது அன்பு, பாசம் மற்றும் உறவுகளை தவிர்த்து முருகனின் பாதங்களில் சரணடைய இந்த கந்த சஷ்டி கவசம் உதவுகிறது.
8. எந்த வறுமையில் இருந்தாலும் கூட, அதாவது ஒரு விளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை படிக்க முடியாத நிலையில் இருந்தாலும் கூட, எவர் ஒருவர் முயற்சித்து கந்தசஷ்டி கவசத்தை படிக்கிறார்களோ அவர்களை வெள்ளி விளக்கேற்றி இந்த கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் நிலைக்கு உயர்த்தும்.
9. எவர் ஒருவர் கந்த சஷ்டி கவசத்தை படிக்கிறாரோ அவருக்கு நவகிரகங்களின் ஆசி கிடைக்கும்.
10. பகையைப் போக்கக்கூடிய வல்லமை இந்த கந்த சஷ்டி கவசத்திற்கு உண்டு.
11. நமது உடலில் இருக்கக்கூடிய ஆத்ம சக்திகளை மேல் எழும்ப செய்ய இந்த கந்த சஷ்டி கவசம் உதவுகிறது.
12. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் முருகப்பெருமானை போற்றி அர்ச்சித்து வணங்கும் பொழுது அனைத்து அர்ச்சனை பலன்களும் நமக்கு கிடைக்கும்.