BJP ADMK: தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள் வேகமாக பரவி வருகின்றன. ஆனால் அரசியல் வட்டாரங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவுக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை குரல்கள் எழுந்துள்ளன. பாஜக கடந்த சில ஆண்டுகளாக பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகளை பலவீனப்படுத்தும் அரசியல் தந்திரத்தை பின்பற்றி வருகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மற்றும் என்.சி.பி. கட்சிகளைப் பிளவுபடுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய பாஜக, அதே மாதிரி தந்திரத்தை தென்னிந்திய மாநிலங்களிலும் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அதிமுக தற்போது தலைமை மாற்றத்திற்குப் பிறகு தனது அமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், கட்சியின் தனித்தன்மை குறையும் என்றும், வாக்காளர் நம்பிக்கை சிதையும் என்றும் கூறப்படுகிறது. சில அதிமுக மூத்த தலைவர்களும், கட்சியின் அடிப்படை வாக்காளர்களும் பாஜக விரோத மனநிலையில் இருப்பதால், இது கூட்டணி கட்சிக்கே பாதகமாக அமையும் என எச்சரிக்கின்றனர். மேலும், மகாராஷ்டிராவில் பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகள் போல அதிமுகவையும் மெதுவாக தளர்த்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் என சிலர் சந்தேகிக்கின்றனர்.
இதனால், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் அதிமுக தன் அரசியல் திசையை தெளிவாக வரையறுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்தால் குறுகியகால நன்மை கிடைத்தாலும், நீண்டகாலத்தில் அதிமுகவின் அடையாளத்திற்க்கும் வலிமைக்கும் பெரிய ஆபத்து ஏற்படும் என அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

