BJP TVK: அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருகின்றன. இந்நிலையில் தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கரூரில் தவெக சார்பில் நடந்த பரப்புரையில் எதிர்பாராத விதமாக 41 உயிரிழப்புகள் ஏற்பட்டது நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழு அமைத்த நிலையில் இதனை தவெக தரப்பு ஏற்கவில்லை.
இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டுமென தவெக தரப்பினர் மனு அளித்ததால், இது மத்திய அரசின் கைக்கு சென்றது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வரும் நிலையில், அவருக்கு பெருகும் ஆதரவை கண்ட பாஜக, அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது மட்டுமல்லாமல் கரூர் விவகாரத்தில் அவருக்கு துணையாக நின்றது. ஆனால் அப்போதும் கூட விஜய் பாஜக உடன் கூட்டணி சேர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக விஜய்யை நேரடியாக விமர்சிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் தான் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவிருந்த நிலையில், சென்சார் போர்டு வழங்காததன் காரணமாக படம் திரையரங்குக்கு வரவில்லை. கரூர் வழக்கும், தணிக்கை வாரியமும் மத்திய அரசின் கட்டுபாட்டின் கீழ் உள்ளதால் இதனை வைத்து விஜய்யிடம் அரசியல் ஆதாயம் பார்த்து விடலாம் என்று பாஜக திட்டம் தீட்டி இருக்கிறது. இந்த சூழலில் தவெகவை சேர்ந்த யாரும் பாஜகவை விமர்சிக்காதது, பாஜக மேலுள்ள பயத்தினால் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.