TVK BJP ADMK: பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி திரும்பியுள்ள பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி வியூகங்களை வகுத்து வருகிறது. தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக அதிமுக கூட்டணி மட்டும் போதாது என்று நினைத்து மக்கள் ஆதரவு பெற்ற கட்சியான தவெகவையும் கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. ஆனால் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் விஜய் தெளிவாக இருக்கிறார். மேலும் பல்வேறு இடங்களில் பாஜகவை விமர்சித்தும் வருகிறார். அப்போதும் கூட விஜயை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை பாஜக கைவிடவில்லை.
இதற்காக கரூர் சம்பவத்தில் தவெகவின் குரலாக ஒலித்தது மட்டுமல்லாமல், விஜய் கேட்காமலேயே அவருக்கு ஆதரவாக 8 பேர் கொண்ட குழுவையும் அமைத்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது. இவ்வாறு ஏகப்பட்ட செயல்களை விஜய்க்காக செய்தும் கூட அவர் பாஜக கூட்டணியை புறக்கணித்து வந்தார். இந்நிலையில் தான் NDA கூட்டணியிலிருந்து பிரிந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோர் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செங்கோட்டையன் கூறி பாஜகவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார்.
இவர்கள் இருவரையும் மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது நிறைவேறவில்லை. இப்போது இவர்கள் விஜய்யுடன் இணைவது டெல்லி மேலிடத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அதிமுகவிலிருந்து இன்னும் சில தவெகவில் இணைய இருக்கிறார்கள் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில் இது பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதிமுகவின் வருகையாலும், தவெகவின் எதிரிப்பாலும், பாஜக கூட்டணி பலமிழந்து காணப்படுகிறது. மேலும் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் தற்சமயம் வரை கூட்டணிக்கு பச்சை கொடி காட்டாததால் பாஜக இம்முறையும் தமிழகத்தில் தோல்வியை தழுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.