BJP TVK: தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக மற்றும் திமுகவிற்கு சவால் விடும் வகையில் புதிய கட்சியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இவர் தனது முதல் மாநாட்டிலேயே திமுக தான் தனது அரசியல் எதிரி என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது முதல் இப்போது வரை திமுகவிற்கும், தவெகவிற்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது விஜய்யிக்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஆனாலும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் போட்டி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது.
இதை பலரும் எதிர்த்து வரும் நிலையில் பாஜகவும் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. ஏற்கனவே விஜய்யை பாஜக இயக்குகிறது என்று பலரும் கூறி வரும் நிலையில் இது விஜய் பின்னால் பாஜக இருப்பதை உறுதிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. தவெகவிலிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களும் பாஜக உடன் தொடர்பில் இருப்பவர்கள் தான் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றிப்பது பேசு பொருளாகியிருக்கிறது.
கரூர் சம்பவம் தொடர்பாக பாஜக, விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்களாக விஜய்யை வஞ்சித்து வந்த பாஜக தற்போது விஜய் பக்கம் நிற்பது, கூடிய விரைவில் விஜய் பாஜகவில் இணைவார் என்பதற்கு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து விஜய் எந்த கருத்தும் கூறாமலிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.