BJP TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் பட்சத்தில் அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை மேலும் வேகப்படுத்தும் வகையில், நடிகர் விஜய் புதிதாக கட்சி துவங்கியுள்ளார். இவரின் கட்சிக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு பெருகி வருவதால், இவரை கூட்டணியில் சேர்க்க பலரும் முயற்சித்தனர். அதில் முதன்மையான அரசியல் கட்சி அதிமுகவும், பாஜகவும் தான். கரூர் சம்பவத்தில் விஜய் மேல் தவறு இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் தவறு முழுக்க தமிழக அரசு மீது தான் உள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார்.
மேலும் தேசிய கட்சியான பாஜக ஒரு படி மேலே சென்று திமுக அரசு அமைத்த தனி நபர் குழுவில் நம்பிக்கை இல்லையென, பாஜக எம்.பி.க்கள் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது. ஆனால் அப்போதும் கூட விஜய் பாஜக கூட்டணிக்கு மறுத்து விட்டார். இதனால் பாஜக விஜய்யை நேரடியாக விமர்சிக்க தொடங்கிவிட்டது. இது ஒரு புறம் இருக்க, இன்னும் சில பாஜக தலைவர்கள் விஜய்யை இப்போதும் கூட கூட்டணிக்கு அழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எந்த ஒரு செய்தியாளர் சந்திப்பாக இருந்தாலும் விஜய்யை கூட்டணிக்கு அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் கூட தவெக-பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனும் இதனை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அவர், பொது எதிரியை வீழ்த்துவதற்காக தான் கூட்டணிகள் உருவாக்கபடுகின்றன என்றும், தமிழகத்தில் திமுகவை வீழ்த்த விஜய்க்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். விஜய், பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் பாஜகவின் டாப் தலைகள் அவரை கூட்டணிக்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.