TVK BJP: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், தேர்தல் களம் புதிய வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் வருகை. விஜய் புதிய கட்சி துவங்கியதிலிருந்தே அரசியல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இவரின் வருகை திராவிட கட்சிகளுக்கே சவால் விடும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென அதிமுக-பாஜக பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்தது. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது, கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்தது மட்டுமல்லாமல், கரூர் விவகாரத்தை விசாரிக்க பாஜக சார்பில் தனி நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது.
இவை எதற்கும் அடிபணியாத விஜய், கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்பதை தெளிவாக கூறிவிட்டார். ஆனாலும் பாஜக விஜய் உடனான கூட்டணி பேச்சு வார்த்தையை கை விடுவதாக தெரியவில்லை. திமுக சார்பில் நடத்தப்பட்ட அறிவு திருவிழாவில், கலந்து கொண்ட தலைவர்கள் அனைவரும் விஜய்யை பற்றியே விமர்சனத்தை முன் வைத்தனர். இதற்கு பதிலடியாக பேசிய விஜய் இது அறிவு திருவிழா இல்லை, அவதூறு திருவிழா என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த திமுகவின் துணை முதல்வர் உதயநிதி அறிவு இருக்கவன் அறிவு திருவிழா நடத்துறான் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது உதயநிதியின் கருத்து குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இவர்களுக்கு மட்டும் தான் அறிவு இருக்கிறதா? மற்றவர்களுக்கு அறிவு இல்லை என்பது போல இவர்கள் பேசுகிறார்கள். அறிவாலயம் என்று பெயர் வைத்து கொண்டால் உங்கள் எல்லோருக்கும் அறிவு இருக்கிறது என்று அர்த்தம் ஆகி விடாது என்று அவர் பதிலடி கொடுத்திருக்கிறார். உதயநிதியின் கருத்து விஜய்யை விமர்சித்து இருக்கும் பட்சத்தில், தமிழிசை சௌந்தரராஜன் விஜய்க்கு ஆதரவாக பேசி இருப்பது, பாஜக மீண்டும் மீண்டும் விஜய் கூட்டணியில் இணைக்க முயற்சிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

