
BJP CONGRESS: விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பல்வேறு அரசியல் மற்றும் சமூக விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை, நடிகர் விஜய் மாமல்லபுரம் அழைத்து ஆறுதல் கூறியதை பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். விஜய் ஏற்கனவே தொலைபேசியில் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி உள்ளார். அவர் அழைத்ததன் பேரில் அவர்கள் மாமல்லபுரம் சென்றுள்ளனர். இது இருவருக்குள் உள்ள விஷயம்.
இதில் நாம் தலையிட தேவையில்லை, என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எஸ்.ஐ.ஆர் என்பது ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் வழக்கமான செயல்முறை. இதை வேறு விவகாரங்களுடன் குழப்ப வேண்டாம். தற்போது சிலர் இதை அரசியல் ரீதியாக பயன்படுத்த முயல்கின்றனர் என குறிப்பிட்டார். ஊடகங்களை நோக்கி, மைக்கை பிடித்து கேள்வி கேட்பவர்கள் முதல் கீழ்தட்டு மக்கள் வரை எல்லோரையும் பாஜக குழப்ப முயற்சி செய்கிறது என்றும் விமர்சித்தார்.
விலைவாசி உயர்வு, வேலையின்மை, மக்களின் அன்றாட திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளிலிருந்து கவனத்தை மாற்ற பாஜக பரபரப்பை உருவாக்குகிறது என்றும் குற்றம் சாட்டினார். இந்த நேரத்தில், விவசாய குடும்பத்தை சேர்ந்ததாக கூறும் எடப்பாடி பழனிசாமி பாஜகவை ஆதரிப்பது வருத்தத்திற்குரியது எனவும், ஜி.கே. வாசன், பண்ணையார் என்பதால் அவர் ஆதரிப்பது புரிந்துகொள்ளலாம். ஆனால் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் பாஜகவை ஆதரிப்பது ஏற்க முடியாதது என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
