DMK BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகளனைத்தும் அடியெடுத்து வைத்துள்ளது. மத்திய அரசான பாஜக தமிழகத்தில் காலூன்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த முயற்சிகள் எதுவும் ஈடேறாத பட்சத்தில் தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த பாஜக அதிமுகவுடன் பல்வேறு உடன்பாடுகள் இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு 1 வருடத்திற்கு முன்பே அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது.
ஆனால் அதிமுகவிலும் உட்கட்சி பிளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த ஒரு கூட்டணியால் மட்டும் வெற்றி பெற முடியாது என்றுணர்ந்த பாஜக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று திட்டம் தீட்டியது. ஆனால் விஜய் கட்சி துவங்கிய நாள் முதலே பாஜகவை தனது கொள்கை எதிரி என்று கூறி வருவதால் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இதனால் பாஜகவும், அதிமுகவும் தங்களின் திட்டத்தை மாற்றியுள்ளதாக தெரிகிறது. திமுகவை ஆட்சி கட்டிலிலிருந்து அகற்ற வேண்டுமென்ற நோக்கில் இருக்கும் பாஜக, விஜய் கூட்டணிக்கு ஒத்து வராததால் ஆளுங்கட்சியின் குடும்ப அரசியலை தன்னுடைய அடுத்த நகர்வுக்கு பயன்படுத்த போவதாக தெரிகிறது. இது ஏற்கனவே திமுக அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்களுக்கும், குடும்ப அரசியலை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகளும், மக்களுக்கும் அரசின் மீது அதிக கோபத்தை ஏற்படுத்தும்.
இதற்கு முன் ஒரு முறை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு தர வேண்டுமென கூறியது அமித்ஷாவின் தற்போதைய நிலைபாட்டை உறுதி செய்யும் வகையில் உள்ளது. ஏனென்றால் தமிழிசை சௌந்தரராஜனின் கருத்து, துணை முதல்வர் பதவியில் உதயநிதி இருப்பதால், குடும்ப அரசியலை எதிர்க்கும் நோக்கில் இருந்தது. அதை அவர் கூட்டணி கட்சிகளிடமும் திணித்தார். குடும்ப அரசியலை குறி வைக்க வேண்டுமென்று பாஜக முடிவெடுத்துள்ளது, இதன் மூலம் தெளிவாக தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.