BJP TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்று அழைக்கப்படும் இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறது. கூட்டணி அமைக்கப்படும் என்று விஜய் கூறியதிலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
அதிமுக, திமுக கூட்டணியில் யார் இணைவார்கள் என்ற காலம் போய் தவெக உடன் எந்த கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்படும் அளவிற்கு விஜய் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றே கூறலாம். தவெகவின் கரூர் பிரச்சாரத்தில் 40 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது.
தனி நபர் குழுவை ஏற்காத பாஜக, ஹேமா மாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில் இது எதிர்பாராமல் நடந்த இழப்புக்கள் இல்லை, திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் கேட்காமலேயே பாஜக இந்த ஏற்பாட்டை செய்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.
திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அதிமுக ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், விஜய்யையும் கூட்டணியில் இணைத்து விட்டால் கேரளாவிலும் எளிதாக வென்று விடலாம் என்ற நோக்கத்தை வைத்து தான் பாஜக இவ்வாறான குழுவை அமைத்திருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதற்கு முன் எத்தனையோ கூட்ட நெரிசல் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் குழு அமைக்காத பாஜக இதனை மட்டும் ஏன் விசாரித்து வருகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.