இனி தமிழகத்தில் பாஜகவிற்கு அசுர வளர்ச்சிதான்! பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கருத்து!

Photo of author

By Sakthi

பாரதிய ஜனதாவிற்கு இனி தமிழ்நாட்டில் பின்னடைவு என்பது இல்லை எனவும் முன்னேற்றம் மட்டுமே இருக்கும் என்று அந்தக் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதாவின் தேசிய மகளிர் அணி தலைவராக பொறுப்பேற்ற பின்பு இன்று முதல் முறையாக கோயமுத்தூர் வந்த வானதி சீனிவாசன் அவர்களுக்கு, விமான நிலையத்தில் அந்த கட்சியினர் மற்றும் தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்து இருக்கிறார்கள் அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வானதி ஸ்ரீனிவாசன், தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படவேண்டும் என்ற காரணத்திற்காகவே யாத்திரையை மாநிலத் தலைவர் முருகன் நடத்தி வருவதாக தெரிவித்து இருக்கின்றார். இந்துக்களை அவமானப்படுத்துபவர்களை அம்பலப்படுத்துவதற்காகவே இந்த யாத்திரை எங்கள் சார்பாக நடத்தப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார். முறையாக நடத்தப்படும் இந்த யாத்திரை தடுக்கப்பட்டால் மக்களிடம் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் தெரிவித்ததை ஆளும் தரப்பினர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதோடு அதிமுகவுடன் கூட்டணியில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது என்றும் கூட்டணியின் தலைமையாக அதிமுகதான் இருப்பதாகவும் தெரிவித்தார் வானதி ஸ்ரீனிவாசன். கூட்டணியில் தொகுதி பங்கீடு சம்பந்தமாக கட்சியின் தலைமை முறையாக அறிவிக்கும் என்று கூறிய அவர் பாஜகவிற்கு இனி தமிழகத்தில் பின்னடைவு என்பது இல்லை எனவும் முன்னேற்றம் மட்டுமே இருக்கும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.