BJP TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இம்முறை அதிமுக, திமுக, தவெக, நாதக போன்ற கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் தொகுதிகள் குறித்தும், தேர்தல் வியூகங்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதிமுக உடன் பாஜக கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், மற்ற கட்சிகளுடன் இவ்விரண்டு கட்சிகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலை உள்ளது. பீகாரில் பெற்ற வெற்றியை போலவே தமிழகத்திலும் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு அதிமுகவின் கூட்டணி மட்டும் போதாது என்று நினைத்த பாஜக தவெகவின் வரவேற்பை பார்த்து அதனையும் கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. அதற்காக, விஜய் பாஜகவை கொள்கை எதிர் என்று கூறி கடுமையாக விமர்சித்து வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல், கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்தது. அதிமுகவும் சட்டசபை கூட்டத்தில் தவெகவின் குரலாக ஒலித்து வந்ததை பார்க்க முடிந்தது.
இதனை கண்டு கொள்ளாத விஜய் இவ்விரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லையென்பதை தெளிவுபட கூறி விட்டார். இதனால் அதிமுகவும், பாஜகவும் விஜய்க்கு எதிராக திரும்பி விட்டனர். இந்நிலையில், பாஜகவின் மாநில இணை அமைப்பாளர் நாச்சியப்பன் கூறிய கருத்து தவெக-பாஜக கூட்டணிக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டது போல இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இது குறித்து பேசிய அவர், விஜய் எதிர்காலத்தில் NDA கூட்டணியில் சேரும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த கூற்று, பாஜக தவெகவை மீண்டும் மீண்டும் கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது என்பதை நிரூபிக்கிறது.

