VSK BJP: அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜக, தற்போது தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் தலைமையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கம் போல தமிழகத்தில் பாஜகவின் அரசியல் எதிரியான திமுக அரசை பற்றி கடுமையாக விமர்சித்தார்.
மேலும் திமுகவில் சமூக நீதி இல்லையென்று கூறிய அவர், சமூக நீதி இல்லாத இடத்தில் திருமாவளவன் ஏன் இன்னும் இருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார். பாஜகவில் தான் சமூக நீதி இருக்கிறது என்றும் கூறிய அவரின் இந்த கருத்து விசிகவை மறைமுகமாக கூட்டணிக்கு அழைக்கும் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவிலிருக்கும் மூத்த தலைவர்கள் சிலரும் திருமாவை குறி வைத்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுக உண்மையிலேயே சமூக நீதியை பின்பற்ற கூடிய கட்சியாக இருந்தால், மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது, துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு வழங்க வேண்டுமென்று கூறியிருந்தார். தற்போது நயினாரும் இந்த கருத்தை கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விசிக இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்று தெரியவில்லை. மேலும், விசிக திமுக கூட்டணியியை விட்டு வெளியேறும் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்றும், அப்படி நாங்கள் வெளியேறிவிட்டால் அதனை எதிர்க்கட்சிகள் தீபாவளியாக கொண்டாடுவார்கள் என விசிக தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது .

