BJP TVK: தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். எந்த ஒரு புதிய கட்சிக்கும் இல்லாத ஆதரவு விஜய்க்கு உள்ளது. விஜய்க்கான இந்த வரவேற்பு திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள், சிறிய கட்சிகள் என அனைத்து கட்சிகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். தவெக பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம், விஜய்யின் தொண்டர்களாக அல்லாமல், ரசிகர்களாகவே இருந்தாலும், அது அத்தனையும் சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு வாக்காக மாறும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக விஜய்யை கூட்டணியில் சேர்க்க மாநில கட்சியான அதிமுகவும், தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. இதனால் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. திமுக தவெகவின் அரசியல் எதிரி என்பதால் விஜய் அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க பாஜக விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பல முயற்சிகளை செய்து வந்தது.
பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் விஜய்யின் குரலாக ஒலித்தனர். ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் பாஜகவோ விஜய்யை கூட்டணிக்குள் சேர்க்கும் வேலையை கைவிடுவதாக தெரியவில்லை. பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர், மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி ஸ்ரீநிவாசன் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், விஜய் திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் இருக்கிறார்.
அப்படி இருக்கையில் தனியாக நின்று எவ்வாறு திமுகவை வீழ்த்த முடியும், ஒன்றாக சேர், ஒன்றாக சேர் என்று சொல்லும் விஜய், தவெக யாருடன் சேரப்போகிறது என்பதை அவர் தான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து, விஜய்யை மீண்டும் பாஜக கூட்டணிக்கு வரசொல்லி நேரடி அழைப்பு விடுத்தது போல தெரிகிறது என பலரும் கூறி வருகின்றனர். வானதி ஸ்ரீனிவாசன் இதற்கு முன் ஒரு முறை விஜய்யை கூட்டணிக்கு வர சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை. பாஜக அப்படிபட்ட கட்சியும் கிடையாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

