BJP: சென்னை அண்ணாநகரில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் பாஜக சார்பாக மிகப்பெரிய தொடக்க விழா இன்று நடைபெற்றது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, என பலரும் பங்கேற்றனர்.
அப்போது உரையாற்றிய அண்ணாமலை, பாஜக – அதிமுக கூட்டணி வரவிருக்கும் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெறும். மழை, வெயில், புயல் எதுவானாலும் அடுத்த நான்கு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் காசை வைத்து தேர்தலில் வெல்லலாம் என நினைக்கிறார். ஆனால் மக்கள் அதற்கு தகுந்த பதிலை கொடுப்பார்கள் என்றார். மேலும் அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கரூரில் 88 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர்.
ஆனால் அதற்கு திமுக அரசு எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக 1500 போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். ஆனால் மக்களின் உயிரைக் காக்க யாரும் முன்வரவில்லை. இதுவே திமுக ஆட்சியின் முகம் என கடுமையாக விமர்சித்தார். 2026-ஆம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி இருக்கையில் அமர வைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார். இது தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கம்.
சினிமா உலகில் நடிப்பவர்கள் அரசியலை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. மக்கள் இப்போது விழித்துள்ளனர் என்றும், ஸ்டாலினை நேரடியாக குறிவைத்து முதல்வருக்கு ஆய்வு கூட்டம் நடத்தத் தெரியாது. ஆனால் வெளிநாடுகளிலும் டெல்லியிலும் தேவையில்லாமல் சண்டை போடுகிறார். திமுக ஆட்சியில் முதல்வர் பேண்ட் போடுவது, உதயநிதி நாயோடு போட்டோ எடுப்பது இதுவே ஆட்சியாக மாறியுள்ளது என்று கடுமையாக தாக்கினார்.
இந்த நிகழ்வின் மூலம் பாஜக தனது 2026 தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக ஆரம்பித்துள்ளது. தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் எனப்படும் இந்த சுற்றுப்பயணம் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தையும் தொடும் விதமாக நடத்தப்படவுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.