ADMK BJP: 2026 யில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பாமக, அதிமுக போன்ற கட்சிகளிடையே உட்கட்சி மோதல் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அதிலும் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும், அதிமுகவில் இது உச்ச நிலையை எட்டியுள்ளது என்றே கூறலாம். இபிஎஸ்யின் தலைமையின் மேல் நம்பிக்கை இல்லாத பலர் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவது, இபிஎஸ்யின் தலைமைக்கு எதிராக கழக குரல் எழுப்புபவர்களை இபிஎஸ் கட்சியிலிருந்து அடியோடு நீக்குவது போன்ற பல்வேறு நிகழ்வுகள் அதிமுகவில் அரங்கேறி விட்டன.
இந்நிலையில், பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என கட்சியின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், செங்கோட்டையனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பிறகு செங்கோட்டையன் டெல்லி சென்று மதிய அமைச்சர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அதிமுகவின் உள்விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அமித்ஷா கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்த இக்கட்டான நிலையில், நால்வர் அணி உருவானது. இவர்கள் ஒரு அணியாக திரண்டு செயல்பட்டால், அதிமுகவின் வாக்கு வங்கி பாதிக்கும்.
இதன் காரணமாக அதிமுக கூட்டணியிலிருக்கும் பாஜகவிற்கு இது பின்னடைவை ஏற்படுத்தும். இந்நிலையில், பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்திகாயினி அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால் தான் திமுகவை விரட்ட முடியும் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து, ஒருங்கிணைப்பு நடவடிக்கைக்காக பாஜக தீட்டிய திட்டமாக தெரிகிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் அதிமுகவிடம் நேரடியாக ஒருங்கிணைப்பு குறித்து பேசாமல் இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறி வருகின்றன.

