ADMK: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக நேற்று கூடிய நிலையில் அதில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டது. கரூர் விவாதம் குறித்து பேசிய ஸ்டாலினின் அறிக்கையை அவை குறிப்பிலிருந்து நீக்கும்படி இபிஎஸ் தரப்பினர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் இருக்கையின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் அதிமுகவினர் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு கையில் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர். இதனை கண்ட சபாநாயகர் அப்பாவு ரத்த கொதிப்பா என்று கிண்டலடிக்கும் தோனியில் கேட்டிருந்தார். இதற்கு தனது சமூக வலைதள பக்கம் மூலம் பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, கரூர் துயரத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கேற்கும் வகையில் வகையிலும் சொல்லெண்ண வலிகளையும், வேதனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் கருப்பு பட்டை அணிந்தால், அதனை கிண்டல் செய்யும் தோனியில் உங்கள் சபாநாயகரும், அமைச்சரும் மிக கேவலமாக பேசினார்கள்.
ஆறு மாதத்தில் ஆட்சி போனதும் சிறை சென்று விடுவோமோ என்ற பயத்திலேயே உங்கள் அமைச்சர்கள் திரிவதாலேயோ என்னவோ கருப்பு பட்டையை கண்டால் கூட அவர்களுக்கு சிறை நியாபகம் தான் வருகிறது. பதினாறாவது சட்டப் பேரவையில் உறுப்பினர் எல்லோரையும் சேர்த்து பேசியதை விட அதிகமாக பேசிய பெருமைக்குரிய சபாநாயகர் கருப்பு பட்டையை பார்த்து ரத்த கொதிப்பு என்று கேட்டீர்கள்.
இப்போது சொல்கிறேன், ஆம் இரத்த கொதிப்பு தான்; ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்துதான் கருப்பு பட்டையை அணிந்தோம். இந்த துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் உங்கள் திமுக அரசு அரசியல் செய்கிறது. அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்பு பட்டை அணிந்தோம் என்றும் கடுமையாக தன்னுடைய பதிலை தெரிவித்திருந்தார். கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வருக்கு, உண்மை சுடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.