பும்ராவின் அதிரடி பந்துவீச்சு! பாகிஸ்தானுக்கு பாய் பாய் சொன்ன இந்தியா! 

0
520
Bumrah's action bowling! India said bye bye to Pakistan!
Bumrah's action bowling! India said bye bye to Pakistan!
பும்ராவின் அதிரடி பந்துவீச்சு! பாகிஸ்தானுக்கு பாய் பாய் சொன்ன இந்தியா! 
ஜஸ்பிரித் பும்ராவின் அசத்தலான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி20 தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது தோல்வி பெற்ற பாகிஸ்தான் உலகக் கோப்பை தெடரின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளது.
நேற்று(ஜூன்9) அமெரிக்காவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் அதிரடியாக விளையாடத் தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழக்கத் தொடங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா 13 ரன்களுக்கும் விராட் கோஹ்லி 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் மற்றும் அக்சர் பட்டேல் சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர். பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த அக்சர் 20 ரன்களுக்கும் ரிஷப் பந்த் 42 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அவர்களுக்கு பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஹாரிஸ் ராப், பசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது அமீர் 2 விக்கெட்டுகளையும் சாஹீன் அப்ரிடி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
120 ரன்களை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசம் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் நிதானமாக விளையாடத் தெடங்கினார்.
ஒருபுறம் முகமது ரிஸ்வான் பொறுமையாக ரன்களை சேர்க்க மறுபுறம் களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து ரன்களை குவிக்க தடுமாறினர்.
தொடர்ந்து விளையாடிய முகமது ரிஷ்வான் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உஷ்மான் கான், ஃபக்கர் ஜமான் ஆகியோர் தலா 13 ரன்களும் இமாத் வசிம் 15 ரன்களும் எடுத்தனர். கடைசி 6 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசியில் களமிறங்கிய நசீம் ஷா 9 ரன்களை சேர்த்தார். இருப்பினும் பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களின் முடிவில் 113 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதனால் பாகிஸ்தான் அணி இலக்கை எட்ட முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 14 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தன்னுடைய இரண்டாவது லீக் போட்டியிலும் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் தருவாயில் இருக்கின்றது. ஏற்கனவே அமெரிக்கா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. மேலும் இந்தியா தற்பொழுது இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. அமெரிக்கா அல்லது இந்தியா இரண்டு அணிகளுக்கு உள்ள இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியை பெற்றாலும் பாகிஸ்தான் அணிக்கு இக்கட்டான சூழல் ஏற்படும்.