இறுதி சடங்கில் கலந்து கொள்ள லட்சங்களில் வாடகை கொடுத்து சொந்த ஊர் வந்த தொழிலதிபர்! காரணம் இதுதானாம்!
தற்போதுள்ள அவசர உலகில் யாரும் எந்த நிகழ்வையும் முக்கியமானதாக எடுத்துக் கொள்வதில்லை. யாரவது முக்கியமாக தாய், தந்தை இறந்து விட்டால் கூட இறுதி காரியங்களுக்கு வர யோசனை செய்கிறார்கள். அப்படி இருக்கையில் தந்தையின் இறுதி சடங்கிற்காக பல லட்சங்கள் செலவு செய்து வந்த தொழிலதிபரை உலகம் விநோதமாகத்தான் பார்க்கும். பல நடிகர்கள் கூட இந்த மாதிரியான துயர சம்பவத்திற்கு செல்ல முடியவில்லை என வேதனை தெரிவித்ததை நாம் கண் கூடாக பார்த்திருப்போம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சுப்பையா. இவருக்கு வயது 72. இவரது மகன் சசிகுமார். 49 வயதான இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அவர் தொழிற்சாலையின் வேலை விஷயமாக இந்தோனேசியா வரை சென்று இருந்தார். இந்நிலையில் நவம்பர் மாதம் 30 ம் தேதி அவரது தந்தை உடல்நலக்குறைவால் திடீரென இறந்து விட்டதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனை கேட்டு அவர் மிகவும் வேதனை அடைந்தார். உடனே இந்தோனேசியாவில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு சசிகுமார் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து பெங்களூரு சென்றார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சாலை வழியாக வந்தால், காலதாமதம் ஏற்படும். மேலும் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாது என்பதன் காரணமாக பெங்களூருவில் இருந்து 5லட்சம் ரூபாய்க்கு வாடகை ஹெலிகாப்டர் ஒன்றை எடுத்து அதன் மூலம் புதுக்கோட்டைக்கு நேற்று வந்தார்.
பின்னர் அவர் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கார் மூலம் சாலையின் வழியாக சொந்த ஊரான புதுகோட்டை அருகே உள்ள தென்னங்குடிக்கு சென்று சேர்ந்தார். அங்கு தந்தையின் இறுதிச் சடங்கில் தவறாமல் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை திரும்பவும் ஊருக்கு புறப்பட தயாராக இருந்த ஹெலிகோப்டர்க்கு வெள்ளை எரிவாயு தேனியில் இருந்து போட்டு புறப்பட தயாரான நிலையில், வானிலை மிகவும் மோசமானதாக இருந்தது.
அதன் காரணமாக ஹெலிகாப்டர் திரும்பி செல்ல காலதாமதம் ஏற்பட்டது. எனவே அதன் பைலட் மற்றும் உதவியாளர்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் 2 ம் தேதியான இன்று புறப்பட்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.