
TVK: கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து விஜய் மீதும், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல்குமார் மீதும் கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விஜய் தரப்பு வழக்கறிஞரை வைத்து தீர்வுகாண முயற்சித்து வருகிறது.
இதனை தொடர்ந்து தலைமறைவாகியிருந்த மதியழகனை திண்டுக்கல்லில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவரை அடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இவர் தற்போது சேலத்தில் தலைமைறைவாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனை தொடர்ந்து நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்த்தும் முன் ஜாமீன் கோரியுள்ளனர். இதில் எங்கள் மீது எந்த தவறும் இல்லையென்றும், காவல் துறையினர் கூட்டத்தை சரியாக வழி நடத்தவில்லை. அதனால் தான் இந்த அசம்பாவிதம் நடந்தது என்றும், தனி நபர் ஆணையம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை எங்களை கைது செய்யக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் முன் ஜாமீன் கோரியுள்ள நிலையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனி படை அமைப்பு கூடிய விரைவில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.