TVK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை மேலும் மெருகேற்றும் வகையில், நடிகர் விஜய் கட்சி தொடங்கி பரபரப்பை கூட்டியுள்ளார். விஜய்க்கு அடுத்த படியாக தவெகவில் நன்கு அறியப்பட்டவர் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான். தவெக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே விஜய்யுடன் நெருக்கமாக இருந்து வரும் இவர், கரூர் சம்பவத்திற்கு பின்பு விஜய்யை விட்டும், கட்சியை விட்டும் விலகி இருந்தார். கரூர் விபத்தில் முதல் ஆளாக நின்று கட்சிக்காக குரல் கொடுக்க வேண்டியவர் ஓடி ஒளிந்து கொண்டது விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தான் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இவர் கட்சியில் சேர்ந்த உடன், புஸ்ஸி ஆனந்திற்கு இருந்த மதிப்பு கட்சியில் குறைந்து விட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஈரோடு பிரச்சாரத்தில் கூட புஸ்ஸி ஆனந்த் பேசாதது இதனை உறுதிப்படுத்தியது. இதனால் அதிருப்தியில் இருந்த புஸ்ஸி ஆனந்த் கட்சியில் தனது பலத்தை நிரூபிக்க சில வகையான முயற்சிகளை கையில் எடுத்துள்ளார். அதில் ஒன்று தான், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதனின் நீக்கம்.
செந்தில்நாதன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தவெக மகளிரணி நிர்வாகி ஒருவரது வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக எழுந்த புகாரின் பேரில் புஸ்ஸி ஆனந்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பலரும் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இதனை புஸ்ஸி ஆனந்தும் கையில் எடுத்திருப்பது, தவெகவில் அவரது இருப்பை காட்டி கொள்வதற்கும், செங்கோட்டையனை முந்துவதற்கும் அவர் எடுத்துள்ள முதல் முயற்சியாக பார்க்கப்படுகிறது.