பொதுவாக அசைவம் சாப்பிடுவதும், சாப்பிடாமல் இருப்பதும் அவரவர் மன விருப்பத்திற்கு ஏற்ற ஒன்று. அசைவம் சாப்பிடுவது சரி அல்லது தவறு என்று யாராலும் கூற முடியாது. ஆனால் கடவுளை வணங்கும் பொழுது அல்லது பூஜை செய்யும் பொழுது நாம் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் கூறுவர். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பதை நாம் அறியாமல் இருப்போம். எனவே அதன் காரணத்தை நாம் தற்போது அறிந்து கொள்ளலாம்.
திருவள்ளுவர் ‘புலால் மறுத்தல்’ என்ற ஒரு அதிகாரத்தை எழுதி உள்ளார். இந்த அதிகாரத்தில் உள்ள பத்து குரல்களையும் நாம் படித்து புரிந்து கொண்டோம் என்றால் “இந்த உயிரை வளர்ப்பதற்கு இன்னோர் உயிர் நமக்கு வேண்டுமா” என்ற எண்ணம் நமக்குள்ளே தோன்றிவிடும். இந்த அதிகாரத்தில் உள்ள ஒரு குரல் ‘இறைச்சி உண்பதை ஒருவர் தவிர்த்து விட்டால், இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் அவரை வணங்கும்’ என்பதை கூறுகிறது.
அதேபோன்று இன்னொரு குரலில் ‘நாம் ஆயிரம் பூஜைகளை செய்வதை விட, ஒரு உயிரைக் கொல்லாமல் இருந்தோம் என்றால் அந்த பூஜைக்கான பலன் நமக்கு கிடைக்கும்’ என்பதை கூறியுள்ளார். எனவே ஒரு உயிரைக் கொன்று அதனை சாப்பிட்டுவிட்டு, ஆயிரம் பூஜைகள் செய்தாலும் அதற்கான பலன் நமக்கு கிடைக்காது.
ஒரு உயிரைக் கொன்று தான் நமது உடலில் உள்ள சதை, ரத்தம் மற்றும் உடம்பை வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதாவது காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலமாகவும், நமது உடம்பிற்கு தேவையான அனைத்து வித சக்திகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உயிர் உண்டு அதிலும் மேலான உறவுகளும் உண்டு, என்பதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
அவரவர் கையாலே கொன்றுதான் இறைச்சிகளை சாப்பிட வேண்டும் என்று கூறிவிட்டால், இந்த உலகத்தில் யாராலும் அந்த இறைச்சியை மனதார சாப்பிட முடியாது. எங்கேயோ ஒருவர் அந்த உயிரைக் கொன்று அதன் பிறகு நாம் வாங்கி சாப்பிடுவதால், நமக்கு அந்தப் பாவம் வராது என்பதால் தான் இறைச்சியை அனைவரும் வாங்கி உண்கின்றனர்.
நடமாடும் மனிதர்களாகத்தான் நாம் இருக்க வேண்டுமே தவிர, நடமாடும் சுடுகாடாக இருக்கக் கூடாது. அதாவது மனிதர்கள் இறந்து விட்டால் சுடுகாட்டில் தான் அடக்கம் செய்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் பிற உயிர்களான ஆடு மற்றும் கோழிகளை நமது வயிற்றில் சமாதி செய்து விடுகிறோம். எனவேதான் மக்கள் நடமாடும் மனிதர்களாகவோ அல்லது தெய்வங்களாகவோ தான் இருக்க வேண்டுமே தவிர, நடமாடும் சுடுகாடுகளாக இருக்கக் கூடாது.
என்னதான் இவ்வாறு பல கருத்துக்கள் அசைவ உணவை உண்பது குறித்து இருந்தாலும் கூட, அசைவ உணவு உண்பதும் உண்ணாததும் அவரவர் விருப்பங்கள் மட்டுமே. ஆனால் கடவுளை வணங்கும் போது மற்றும் பூஜைகள் செய்யும் போது, ருத்ராட்சம் அணிந்திருக்கும் பொழுது இறைச்சியை நாம் உண்ணக்கூடாது. வீட்டில் மற்றவர்களுக்காக இறைச்சியை சமைத்து விட்டு, நாம் உண்ணாமல் இருந்தாலும் கூட பூஜை வழிபாடுகளை செய்யக்கூடாது.
அதேபோன்று அசைவ உணவை வீட்டில் சமைக்கும் பொழுது விளக்குகளும் ஏற்றக்கூடாது. ருத்ராட்சமும் அணியக்கூடாது. காலையில் நேரமாக விளக்குகளை ஏற்றி வழிபாட்டினை செய்துவிட்டு, அதன் பிறகு வேண்டுமானால் அசைவ உணவை சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் அடுத்த நாள் பூஜை மற்றும் விளக்குகளை ஏற்றுவதற்கு முன்பாக வீட்டினை சுத்தம் செய்து விட வேண்டும்.
சைவ உணவை உண்பவர்களாக இருந்தால் மட்டும் ருத்ராட்சத்தை தினமும் அணிந்து கொள்ளலாம். ஆனால் அசைவ உணவை சாப்பிடுபவர்கள் பூஜை நேரத்தில் மட்டும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வது நல்லது. அதேபோன்று அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு தெய்வ மந்திரங்கள், ஸ்லோகங்கள், பதிகங்கள் இதுபோன்றும் படிக்கக்கூடாது.
அசைவ உணவை சாப்பிடுவது அவரவர் விருப்பம் என்பதால், ஒன்று அசைவ உணவை சமைப்பதற்கு முன்பாக பூஜைகளை முடித்து விட வேண்டும் அல்லது அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு, வீட்டினை சுத்தம் செய்த பின்னர் பூஜை வழிபாட்டினை செய்ய வேண்டும்.