மயில் இறகு என்று கூறினாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது, முருகப்பெருமானின் வாகனம் என்பது தான். மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றான கிருஷ்ணரின் தலையில் இருப்பதும் இந்த மயிலிறகு தான். எனவே மயில் இறகு என்ற ஒன்றை பார்த்தாலே நமக்கு ஞாபகம் வருவது இந்த இரண்டு விஷயம்தான்.
மூன்றாவதாக ஒன்றும் உள்ளது அதுதான் நமது சிறுவயதில் மயில் இறகை புத்தகத்தில் வைத்தால் அது குட்டி போடும் என்று சொல்லித் திரிந்த அந்த கனாக்காலம். மேலும் நமது நாட்டின் தேசிய பறவை என்றால், அதுவும் இந்த மயில் தான்.
இவ்வளவு சிறப்பு மிக்க இந்த மயிலிறகை பண்டைய காலத்தில் இருந்தே, அதுவும் அரசர்கள் காலத்தில் இருந்து இன்று வரையிலும் இந்த மயிலிறகின் முக்கியத்துவத்தை அறிந்து பயன்படுத்தி வருகின்றோம். பண்டைய காலத்தில் அரசர்களின் விசிறியாகவும் இந்த மயிலிறகு பயன்பட்டு வந்தது.
இன்றைய காலத்திலும் இந்த மயிலிறகு விசிறியை பயன்படுத்துவர்களும் உள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த மயில் இறகு நமது வீட்டில் எங்கு இருக்க வேண்டும்? எந்த திசையில் இருக்க வேண்டும்? எந்த அறையில் இருக்க வேண்டும்? என்பது குறித்து காண்போம்.
இந்த மயில் இறகு என்பது ஆன்மீகம் ரீதியாக மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த மயில் இறகு என்பது ஒரு வீட்டில் இருந்தாலே போதும், அந்த வீட்டில் நேர்மறையான எண்ணங்கள் என்பது பரவி இருக்கும். மேலும் எதிர்மறையான எண்ணங்கள் உருவாவதையும், அந்த வீட்டிற்குள் நுழைவதையும் இந்த மயிலிறகு தடுக்கும்.
அப்படிப்பட்ட இந்த மயிலிறகை வீட்டின் நிலை வாசலில் வைத்தால் கண் திருஷ்டி ஆனது தடுக்கப்படும். மேலும் பில்லி, சூனியம், ஏவல் இது போன்ற எந்த வித தீய சக்திகளையும் இந்த மயிலிறகு உள்ளே நுழைய விடாமல் தடுத்துவிடும்.
மயில் தோகையை விரித்து நடனம் ஆடுவதை அவ்வளவு எளிதில் பார்த்து விட முடியாது. அந்த அற்புதமான காட்சி இந்த மயிலிறகை பார்க்கும் பொழுதெல்லாம் நமது நினைவிற்கு வரும். மேலும் இந்த மயிலிறகை பார்க்கும்பொழுது ஒரு விதமான சந்தோசம், மன அமைதி என்பது கிடைக்கும்.
மன அழுத்தம், கவலைகள், கோபம் என எதுவாக இருந்தாலும் இந்த மயில் இறகை நமது கையில் வைத்து, சிறிது நேரம் பார்த்தாலே போதும் அனைத்து கவலைகளும் ஓடிவிடும். இந்த மயில் இறகை கொண்டு காற்று வீசும் பொழுது காற்றை சுத்தப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால்தான் பண்டைய காலங்களில் அரசர்கள் இதனை பயன்படுத்தினர்.
இத்தகைய மயில் இறகை நமது படுக்கை அறையில் வைப்பதன் மூலம் நிம்மதியான தூக்கம் என்பது ஏற்படும். மேலும் தூங்கும் பொழுது எந்தவித கெட்ட கனவுகளும், தீய எண்ணங்களும் உருவாகாது எனவும் கூறப்படுகிறது. மயிலிறகு இருக்கக்கூடிய இடத்தில் எந்தவித விஷப் பூச்சிகளும் வராது எனவும் கூறப்படுகிறது.
குழந்தைகள் எதுவும் சாப்பிடாமல் அழுது கொண்டே இருக்கிறது என்றால், அந்த குழந்தைகளின் மேல் இந்த மயில் இறகை வைத்து தடவி விடும் பொழுது, அந்த குழந்தையிடம் உள்ள தீய சக்திகள் விலகிவிடும் என்றும் கூறப்படுகிறது. எந்தவித கண் திருஷ்டிகள், தோஷங்கள் இருந்தாலும் விலகி விடும்.
குழந்தைகள் படிக்கக்கூடிய இடத்தில் இந்த மயிலிறகை வைப்பதன் மூலம், குழந்தைகளிடம் கவன சிதைவு ஏற்படாமல் ஒரு மனதுடன் படிப்பில் கவனம் செலுத்துவார்கள் எனவும், எதிர்மறை ஆற்றல்கள் அந்த அறைக்குள் செல்லாது எனவும் கூறப்படுகிறது. இதனால் கல்வியில் சிறந்த ஆர்வத்துடனும், கவனத்துடனும் படிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் மகாலட்சுமியின் அம்சமாக கருதக்கூடிய இந்த மயிலிறகை பணம், நகை, பத்திரம் ஆகியவை வைக்கக்கூடிய பீரோ மற்றும் அறைகளில் இந்த மயிலிறகை வைப்பதன் மூலம் பணவரவானது இரட்டிப்பாகும் எனவும் கூறப்படுகிறது. செல்வத்தை ஈர்க்கக்கூடிய சக்தியும் இந்த மயிலிறகுக்கு உண்டு.
இந்த மயிலிறகை பூஜை அறையில் வைப்பதன் மூலம், வீடு முழுவதும் தெய்வீக அம்சமாக திகழும். மேலும் நேர்மறை ஆற்றல்கள் வீடு முழுவதும் பரவி இருக்கும். லட்சுமி கடாட்சமும் நிறைந்து காணப்படும்.