வீடுகளில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபடலாமா..?? உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம் இதோ..!!

Photo of author

By Janani

வீடுகளில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபடலாமா..?? உங்கள் சந்தேகத்திற்கான விளக்கம் இதோ..!!

Janani

கேட்டவருக்கு கேட்ட வரத்தை வாரி வழங்கக் கூடியவர் ஆஞ்சநேயர். ராமாயணம் என்ற மிகப்பெரிய அற்புதமான காவியம் நிறைவேறுவதற்கு காரணமும் இவர்தான். ஆஞ்சநேயரை நினைக்காமல், அவரை வணங்காமல் இந்த உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேயரை நமது வீடுகளில் வைத்து வழிபடலாமா? அல்லது கூடாதா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும் அதற்கான விளக்கத்தை தற்போது காண்போம்.

ஆஞ்சநேயர் என்பவர் பிரம்மச்சாரி என்பதால் தான் அவரை நமது வீடுகளில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் மக்களுக்கு உருவாகிறது. ஆனால் ஆஞ்சநேயர் படத்தை தாராளமாக நமது வீடுகளில் வைத்து வழிபடலாம். அவ்வாறு நமது வீடுகளில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபடும் பொழுது சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் கடைபிடிக்க வேண்டும் என்பது அவசியம்.

பூஜை அறை என்பது நமது வீடுகளில் தனியாக இருந்தால் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபடுவதில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. திறந்த நிலையில் உள்ள பூஜை அறையில் தான் வைத்து வழிபடக் கூடாது. எனவே திறந்த நிலையில் உள்ள பூஜை அறைக்கு ஏதேனும் ஒரு திரையை போட்டு தான் ஆஞ்சநேயர் படத்தை வைத்து வழிபட வேண்டும்.

ஏனென்றால் பூஜை அறை என்பது திறந்த நிலையில் இருந்தால், நமது குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த படத்திற்கு முன்பாக தான் சென்று வருவோம். அது மட்டுமல்லாமல் நாம் சுத்தபத்தமாக இருந்தாலும் கூட, நமது வீட்டிற்கு வருபவர்கள் சுத்தபத்தமாக இருப்பார்களா என்பது நமக்கு தெரியாது. எனவே பூஜை அறை என்பதை எப்பொழுதும் ஒரு திரையைப் போட்டு மூடி வைத்திருக்க வேண்டும்.

ஆஞ்சநேயர் படத்தை நமது வீடுகளில் வைத்திருந்தால், ஆஞ்சநேயருக்கு தினமும் ஏதேனும் ஒரு நெய்வேத்தியம் என்பதை கண்டிப்பாக வைக்க வேண்டும். நாம் செய்யக்கூடிய சாதத்தில் சிறிதளவு நெய்விட்டு வைக்கலாம் அல்லது ஒரு வாழைப்பழம், கற்கண்டு, பேரிச்சம்பழம், முந்திரிப் பருப்பு இது போன்ற சாதாரண பொருட்களையும் நெய்வேத்தியமாக வைக்கலாம்.

ஆஞ்சநேயர் படத்தை நமது வீடுகளில் வைத்தால் நெய்வேத்தியம் என்பதும், சுத்த பத்தம் என்பதும் கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும். ஒரு சிலர் இதனை கடைபிடிக்க மாட்டார்கள். எனவேதான் ஆஞ்சநேயர் படத்தை வீடுகளில் வைக்க கூடாது என கூறி விடுகின்றனர்.

அதேபோன்று இவரை வழிபடும் பொழுது துளசி மாலை போடலாம். ராமாயணம், சுந்தரகாண்டம் இது போன்றவைகளை படிக்கலாம். ஏனென்றால் இவை அனைத்தும் ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சனிக்கிழமை நாட்களில் அவருக்கு மிகவும் பிடித்த வடை, வெண்ணைய் இது போன்ற உணவுகளை வைக்கலாம்.

உண்மையான பக்தியுடனும், அதிகப்படியான சுத்தபத்தத்துடனும் ஆஞ்சநேயர் படத்தை நமது வீடுகளில் தாராளமாக வைத்து வழிபடலாம். எனவே ஆஞ்சநேயர் பக்தர்கள் இது போன்ற முறைகளை கடைப்பிடித்து, உங்களது வீடுகளில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து தினமும் வழிபடலாம்.