TVK : கரூர் கூட்ட நெரிசல் வழக்கைச் சுற்றி பல்வேறு அரசியல் மற்றும் சட்ட ரீதியான விவாதங்கள் கிளம்பி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் உமாபதி தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அளித்த நேர்காணலில், விஜய் உச்சநீதிமன்றத்தை அடைந்ததன் முக்கிய நோக்கம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு தெரிவித்திருந்த கடுமையான கருத்துக்களை நீக்கச் செய்வதே என்று கூறினார்.
இது வழக்கின் விசாரணை குறித்து அல்ல, அவரின் தனிப்பட்ட மரியாதையும், அரசியல் இமேஜையும் காப்பாற்றும் முயற்சி என்று அவர் தெரிவித்தார். மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின்னர் சிபிஐ விசாரணை உத்தரவு வந்தது. ஆனால் அதனைச் சுற்றி பாஜக மற்றும் தவெக இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் உமாபதி சுட்டிக்காட்டினார். நயினார் நாகேந்திரன் விஜய்க்கு பாதுகாப்பு தேவை என கூறுகிறார்.
ஆனால் அதே கட்சியை சேர்ந்த அண்ணாமலை அதற்கு எதிராகப் பேசி, அவருக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறுகிறார். இது அவர்களுக்குள் உள்ள போட்டியையும், அரசியல் வயிற்றெரிச்சலையும் காட்டுகிறது என்று அவர் விமர்சித்தார். அதிமுக குறித்து பேசும் போது, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை முடிவை நோக்கி செல்கிறது. கூட்டணி அரசியலின் திசை மாறிவிட்டது. பீகார் தேர்தல் முடிவுகள் கூட அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என உமாபதி கூறினார்.
மேலும், ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கு படம் பவந்த் கேசரியின் ரீமேக் என்றும், அதன் படப்பிடிப்பின் போது கரூர் நெரிசல் சம்பவம் நடந்ததாகவும் தெரிவித்தார். மேலும் விஜய் தற்போது தன் அரசியல் முகத்தை காப்பாற்றிக் கொள்ளவே நீதிமன்றத்தை நாடுகிறார். அவர் உண்மையில் கரூருக்கு செல்வாரா, இல்லையா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் என உமாபதி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.