பிரபல வசனமான “அடக்குனா அடங்கக் கூடாதுன்னு அண்ணன் சொல்லிருக்காப்ல” திரௌபதி படத்தில் இருக்கா இல்லையா? 14 இடங்களில் கட் செய்த தணிக்கை குழு
பல்வேறு சாதி மறுப்பு அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பையும் சமாளித்து விட்டு பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனரான மோகன் ஜி அவர்களின் அடுத்த படமான திரௌபதி வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது.
தொடர்ந்து சாதி மறுப்பு பேசும் படங்களே தமிழ் திரையுலகில் வெளிவந்த நிலையில் முதல் முறையாக சாதிகள் உள்ளதடி பாப்பா என சாதியை ஆதரித்து வெளியான இந்த திரைப்படத்தின் டிரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக இருப்பதாக கூறி சர்ச்சைகளுக்குள்ளான திரௌபதி படத்திற்கு தடை விதிக்க கோரி, அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் மத்திய திரைப்பட தணிக்கை துறையிடம் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மறு தணிக்கை செய்யப்பட்டு பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் திரௌபதி படத்தில் 14 இடங்களில் ஆடியோவில் கட் செய்யப்பட்டு படத்திற்கு யு/ஏ சான்று அளிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்ற இந்த நேரத்தில் பெண்களை திட்டமிட்டே காதலித்து ஏமாற்றும் நாடகக் காதலுக்கு எதிரான கருத்துக்களுடன் அண்மையில் வெளியாகி தமிழக மக்களிடையே பரபரப்பை பற்ற வைத்தது திரௌபதி படத்தின் டிரைலர் காட்சிகள். இதனையடுத்து காலங்காலமாக கலப்பு திருமணத்தின் மூலமே சாதியை ஒழிக்க முடியும் என்று கூறி வந்த போலி சாதி ஒழிப்பு போராளிகள் இந்த படத்தை கடுமையாக எதிர்க்க தொடங்கினர்.
மேலும் இதனையடுத்து திரௌபதி படம் தங்கள் சமூகத்திற்கு எதிரானது எனக் கூறி சம்பந்தப்பட்ட சாதி அமைப்பு மற்றும் போலி சாதி ஒழிப்பு போராளிகள் சார்பில் திரௌபதி படத்தை தடை செய்யுமாறு மத்திய தணிக்கைத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த புகாரால் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட திரௌபதி திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து செவ்வாய்கிழமைதிரௌபதி திரைப்படம் மறுதணிக்கைக்காக சென்சார் குழுவினர் முன்னிலையில் திரையிடப்பட்டது.
நடிகை கவுதமி உள்ளிட்ட 9 பேர்கள் கொண்ட தணிக்கை குழுவினர் இந்த திரௌபதி படத்தை பார்த்தனர். இந்த குழுவில் 5 பெண்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சுமார் 14 இடங்களில் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்தனர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய அந்த 14 காட்சிகளிலும் ஆடியோவை மட்டும் கட் செய்ய அறிவுறுத்தியதாகவும், மேலும் 3 இடங்களில் ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்கும் கட் கொடுத்ததாக கூறப்படுகின்றது.
குறிப்பாக இந்த படத்தில் அடக்குனா அடங்கக் கூடாதுன்னு அண்ணன் சொல்லிருக்காப்ல… என்று இளைஞர் ஒருவர் பேசும் வசனத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. மறுதணிக்கை செய்யப்பட்ட திரௌபதி படத்தில் இந்த வசனத்திற்கும் கட் கொடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாவது இந்த படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மூலமாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார் குழுவினர் படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிஅளித்துள்ளனர்.இவ்வாறு அனைத்து தடைகளையும் மீறி திரைக்கு வரும் திரௌபதி படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில் முக்கியமான அந்த வசனம் தணிக்கை குழுவினரால் கட் செய்யப்பட்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து திரௌபதி படம் வருகிற 28 ஆம் தேதி உலகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாக தெரிவித்த படத்தின் இயக்குனர் மோகன் ஜி, இந்த படம் எந்த சாதிக்கும் எதிரானது அல்ல என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கே தெரியாமல் மோசடியாக நடத்தப்பட்ட 3000 நாடக காதல் திருமணங்கள் குறித்து தான் இந்த படம் பேசப் போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.