ஒமைக்ரான் நோய்த்தொற்று! சென்னை வந்தது மத்திய குழு!

Photo of author

By Sakthi

தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், புதுடெல்லி, உட்பட 17 மாநிலங்களில் இந்த நோய் தொற்று பரவுகிறது.

இதற்கு நடுவே புதிய வகை நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய வகை நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கின்ற மாநிலங்களுக்கு பன்னோக்கு குழுக்களை அனுப்பி வைப்பதாக அவர் கூறியிருந்தார், அதனடிப்படையில் தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு வருகை தர இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், புதிய வகை நோய்த்தொற்று பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு நேற்று இரவு சென்னை வந்தடைந்தது.

இந்த குழு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து இருக்கிறார்கள், தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் வரையில் தங்கி மாநில சுகாதார துறை அதிகாரிகளுடன் ஒன்றாக இணைந்து புதிய வகை நோய் தொற்று மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரை செய்ய இருக்கிறார்கள்.

புதிய வகை நோய்த்தொற்று காரணமாக, பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், வெண்டிலேட்டர் வசதிகள், மருத்துவ ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றின் இருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை கண்டறிந்து ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க இருக்கிறார்கள்.