சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்தியாவின் ராஜாங்க நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் படைகளை குவிக்கிறது பாகிஸ்தான். வான் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்க முழு அளவில் எச்சரிக்கையுடன் இருக்க படைகளுக்கு உத்தரவு பறந்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பகல்காமில் தாக்குதல் நடந்தபோது அங்கு ராணுவ வீரர்கள் இல்லாது ஏன் என்கிற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்திருக்கிறது. ராஜ்நாத் சிங், அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலாவது:
உள்ளூர் நிர்வாகத்துக்கு முறையாக தகவல் அளிக்காமல் சுற்றுலா வழிகாட்டிகள் பயணிகளை அங்கு அழைத்து சென்றுவிட்டனர். ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரையின் போது ஜூன் மாத துவக்கத்தில் பகல்காம் பகுதியில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்துவது வழக்கம். உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகள் ஏப்ரல் 20ம் தேதியே சுற்றுலா பயணிகளை அங்கு அழைத்து சென்றுள்ளனர். சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது கூட இந்திய அரசின் கடுமையான நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுவதற்காகத்தான். நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததன் மூலம் அழுத்தமான செய்தியை பாகிஸ்தானுக்கு தெரிவித்திருக்கிறோம்’ என பதிலளித்திருக்கிறார்கள்.