தமிழகத்தில் கடந்த பங்குனி மாதம் முதலே வெயில் கடுமையாக தொடங்கியது. இதனால் விவசாயிகள், கூலி வேலைக்கு செல்வோர், கட்டிட தொழிலாளர்கள், மாணவர்கள் என்று பலரும் பாதிப்புக்குள்ளானார்கள்.
இந்த நிலையில், பங்குனி மாதமே வெயில் கடுமையாக இருந்த சூழ்நிலையில், தற்போது சித்திரை மாத கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த கத்தரி வெயிலில் பொதுமக்கள் திண்டாடி வந்த சூழ்நிலையில், வராது வந்த வரப்பிரசாதமாக புயல் சின்னம் ஒன்று உருவானது.
இதனால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல சென்னையில் இரு தினங்களாக லேசான மழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ததாக சொல்லப்படுகிறது. விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது, அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கோடை வெயில் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.
இதற்கு நடுவே எதிர்வரும் 17ஆம் தேதி வரையில் தமிழகத்தில் மிக கனமழை பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று ஒரே நாளில் பெரம்பலூர், திருச்சி, சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 15ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல வரும் 16ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும், திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று எதிர்வரும் 17ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் என்பதை ஒட்டி இருக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார்வளைகுடா, உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.