அனைத்திலும் மாற்றம்.. கேஸ் விலை முதல் மின் கட்டணம் வரை!! இனி இது தான் வரைமுறை!!
ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து கேஸ் விலை, மின் கட்டணம், ஃபாஸ்டேக், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றில் முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ரேஷன் கார்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று முதல் கொண்டு வரப்படவுள்ள முக்கியமான மாற்றங்கள்…
* ஒவ்வொரு மாதம் ஒன்றாம் தேதி பிறந்தவுடன் கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படும் அல்லது குறைக்கப்படும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கு பயன்படும் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றாம் தேதியான நேற்று (ஆகஸ்ட்1) 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி தற்பொழுது வணிக சிலிண்டர் 1817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
* ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி முதல் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதாவது அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று அதன் பின்னர் உயர் கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக 3.28 லட்சம் மாணவர்கள் மாதம் 1000 ரூபாய் பெறப்போகின்றனர். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
* தேர்தல் காரணமாக புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி புதிய ரேஷன் கார்டுகள் பெறுவதற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இந்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி புதிதாக விண்ணப்பித்த 2 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படவுள்ளது.
* தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகின்றது என்று சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதையடுத்து இந்த மாதத்தின் இறுதியில் அதாவது ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும். இதையடுத்து அனைவரும் தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண விகிதத்தின் அடிப்படையில் மின் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி குறைந்த பட்சம் 50 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை கூடுதலாக மின் கட்டணம் செலுத்தப் போகிறோம்.
* ஆகஸ்ட் ஒன்றாம் தேதியான நேற்று (ஆகஸ்ட்1) முதல் ஃபாஸ்டேக் தொடர்பாகவும் சில புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பாஸ்டேக் வைத்துள்ள நபர்கள் அனைவரும் அதாவது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் இருக்கும் ஃபாஸ்டேக்கை அக்டோபர் 31ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இதை செய்யும் பொழுது கே.ஒய்.சி விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இதனுடன் சேசிஸ் எண், வாகனத்தின் பதிவு எண் ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.
* ஆகஸ்ட் ஒன்றாம் தேதியான நேற்று (ஆகஸ்ட்1) கூகுள் நிறுவனம் தன்னுடைய சேவை கட்டணங்களை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது கூகுள் மேப்ஸ் போன்ற ஒரு சில சேவைகளின் கட்டணத்தை 70 சதவீதம் வரை குறைந்துள்ளது.
* ஆகஸ்ட் ஒன்றாம் தேதியான நேற்று முதல்(ஆகஸ்ட்1) ஹெச்.டி.எப்.சி வங்கியானது தன்னுடைய வங்கியில் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறறைகளை வெளியிட்டு இருக்கின்றது. அதன்படி ஒவ்வொரு மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தும் பொழுது அதாவது பேடிஎம், மொபிகிவிக், கிரெட் போன்ற ஆப்களை பயன்படுத்தி வாடகை போன்ற பரிவர்த்தனைகளை செய்யும் பொழுது 3000 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது பரிவர்த்தனையின் மொத்த தொகையில் 1 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ஆனால் எரிபொருள் போன்ற பரிவர்த்தனைகளுக்கு அதாவது 15000 ரூபாய்க்கு கீழ் செய்யப்படும் எரிபொருள் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படாது என்றும் ஹெச்.டி.எப்.சி வங்கி அறிவித்துள்ளது.