பாமகவின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! மகிழ்ச்சியில் பொது மக்கள்

Photo of author

By Ammasi Manickam

பாமகவின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! மகிழ்ச்சியில் பொது மக்கள்

கடந்த பல ஆண்டுகளாக பாமக சார்பாக வலியுறுத்தி வந்த பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப் பட்டது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பயன் தரும் வாயலூர் முயற்சி: பாலாற்றை உயிர்ப்பிக்க தடுப்பணைகள் வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

பாலைவனமாகிவிடும் என்று கைவிடப்பட்ட பாலாற்றில் அதிசயம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் காரணமாக, அப்பகுதி வளமான பூமியாக மாறியிருக்கிறது. பாலாற்றுக்கு உயிரூட்ட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் வாயலூர் & கடலூர் பாலாற்று தடுப்பணைத் திட்டம் வரவேற்கப்பட்ட வேண்டியதாகும்.

கர்நாடகத்தில் உருவாகி ஆந்திரா வழியாக தமிழகத்திற்குள் நுழையும் பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. 93 கிலோமீட்டர் பாயும் கர்நாடகத்தில் 3 தடுப்பணைகளும், 14 ஏரிகளும் கட்டப்பட்டு மொத்தம் 17 இடங்களில் பாலாற்று நீர் சேமிக்கப்படுகிறது. 33 கிலோ மீட்டர் பாயும் ஆந்திரத்தில் 22 தடுப்பணைகள் பாலாற்றின் குறுக்கே கட்டபட்டுள்ள நிலையில், 222 கிலோ மீட்டர் பாயும் தமிழ்நாட்டில் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகில் 1858-ஆம் ஆண்டில் கட்டப் பட்ட ஒரே தடுப்பணை தான் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. பாலாற்றின் குறுக்கே கூடுதலாக பல தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூட பாலாற்றில் தடுப்பணைகளை கட்ட வேண்டும்; பாலாற்றைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் பாலாறு நுழையும் பில்லூர் அணை முதல் கடலில் கலக்கும் வாயலூர் வரை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.

அதேபோல், உழவர் அமைப்புகளும் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து இப்போதைய செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் ஒன்றியத்தில் பாலாறு கடலில் கலப்பதற்கு சற்று முன்பாக வாயலூருக்கும், கடலூருக்கும் இடையே 1200 மீட்டர் நீளத்திற்கு 5 அடி உயரத்திற்கு தடுப்பணை கட்ட கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இந்த தடுப்பணையை கட்டி முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 5 மாதங்கள் முன்பாகவே கடந்த அக்டோபர் மாத இறுதியில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கல்பாக்கம் அணுமின்நிலையம் அதன் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கிய ரூ.32.50 கோடியில் இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திலும், நடப்பு நவம்பர் மாதத்திலும் பெய்த மழையில் தடுப்பணை நிரம்பி வழிகிறது. தடுப்பணை கட்டப்பட்ட இடத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவுக்கு பாலாற்றின் இரு கரைகளையும் தழுவிக் கொண்டு கடல் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. பாலாற்றில் இந்த அளவுக்கு தண்ணீர் இருப்பது அதன் வரலாற்றில் இது தான் முதல்முறை என்பதால் நூற்றுக்கணக்கானோர் இந்த தடுப்பணையை பார்த்துச் செல்கின்றனர். இதனால் வாயலூர் – கடலூர் இடையிலான பாலாற்று தடுப்பணை புதிய சுற்றுலாத்தலமாக மாறியிருக்கிறது என்றால் மிகையில்லை.

வாயலூர் தடுப்பணை இரு வழிகளில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன் அளிக்கிறது. தடுப்பணைக்கான அடித்தளம் ஆற்று மணலைக் கடந்து களிமண் பரப்பு வரை சுமார் 27 அடி ஆழத்திற்கு நவீன முறையில் அமைக்கப்பட்டிருப்பதால் கடல் நீர் ஊடுருவி நிலத்தடி நீருடன் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாலாற்றில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரைக் கொண்டும், உயர்த்தப்பட்ட நிலத்தடி நீரைக் கொண்டும் அப்பகுதியில் உள்ள 14 கிராமங்களில் 4230 ஏக்கர் நிலங்களில் பாசன செய்ய முடியும்.

பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே செங்கல்பட்டை அடுத்த பாலூர் என்ற இடத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் ஓர் தடுப்பணை கட்டப்பட்டது. அந்த அணை நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கு பயன்படுகிறது. செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள வல்லிபுரம் – ஈசூர் இடையே ரூ.30.90 கோடியில் புதிய தடுப்பணை சில வாரங்களுக்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அந்த அணையிலும் 2 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாலாறு என்பது பாழ்பட்ட ஆறு அல்ல; அதை மீண்டும் பால் போன்று நீர் ஓடும் ஆறாக மாற்றப்படும் என்ற நம்பிக்கையை இந்த தடுப்பணைகள் விதைத்துள்ளன. இதைத் தான் கடந்த 30 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

பாலாற்றில் இப்போது கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தவிர மேலும் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நல்லாத்தூர், ஆலப்பாக்கம், பழவேலி, திருமுக்கூடல், வெண்குடி, உள்ளாவூர், காலூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட திட்ட அறிக்கைகள் தயாரிக்கப் பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகள் அனைத்தையும் அடுத்த சில ஆண்டுகளில் கட்டி முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை தவிர பாலாறு நெடுகிலும் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் 20-க்கும் கூடுதலான தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். தேவைப்பட்டால் கல்பாக்கம் அணுமின்நிலையத்திடமிருந்து பெற்றதை போன்று பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் நிதி உதவி பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.