இறுதிப் போட்டிக்குள் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! மகிழ்ச்சியில் மூழ்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்!

0
157
#image_title
இறுதிப் போட்டிக்குள் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! மகிழ்ச்சியில் மூழ்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்!
நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 10 வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த சி.எஸ்.கே அணியால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே பலம் வாய்ந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடியது.
டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். தொடக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் டெவான் கான்வே 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே, கேப்டன் தோனி இருவரும் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அம்பத்தி ராயுடு மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரும் தலா 17 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க ரவீந்திர ஜடேஜா 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் பந்துவீச்சில் மொஹித் ஷர்மா,மொகம்மது ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்குள் சென்று விடலாம் என்ற நோக்கில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களில் விருத்திமான் சஹா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரர் சுப்மான் கில் நிதானமாக விளையாட தொடங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, கேப்டன் ஹர்திக் பாண்டியா அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து களமிறங்கிய தஷன் ஷானுகா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நிதானமாக விளையாடிய சுப்மான் கில் 42 ரன்களுக்கு தீபக் சாஹர் வீசிய பந்தில்  ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ரஷித் கான் 30 ரன்களுக்கும், விஜய் சஙகர் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 10 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்கள் எடுத்து தோல்வி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்து வீச்சில் தீபக் சாஹர், தீக்ஷனா, ஜடேஜா, பதிரானா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் துஷார் தேஷ்பாண்டே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக  இறுதிப் போட்டிக்கு சென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால் சென்னை அணி இந்த முறை கோப்பை வெல்லுமா என்று எதிர்பார்ப்பிலும் ஆர்வத்திலும் சிஎஸ்கே ரசிகர்கள் மூழ்கியுள்ளனர்.