அதிமுக பாமக உட்பட நாடு முழுவதும் இருக்கின்ற 30க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு!

Photo of author

By Sakthi

தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் கடந்த மாதம் 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று காணொலிக் காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதி கொள்கையை முன்னெடுத்து பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களை பாதுகாத்திட அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிவிப்பின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், தேவகவுடா, என். சந்திரபாபு நாயுடு, உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், அதேபோல ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், உள்ளிட்டோருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.

மேலும் அவர், சந்திரசேகரராவ், என். ரங்கசாமி, அகிலேஷ் யாதவ், மாயாவதி, பவன் கல்யாண், வேலப்பன் நாயர், அசாருதீன் ஜோதி, அமரிந்தர் சிங், சுக்பிர் சிங் பாதல் ஓபிஎஸ், கொங்கு ஈஸ்வரன், வைகோ, மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன், ஜவாஹிருல்லா,உள்ளிட்ட இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இந்த கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, நலம் திகழ இந்த கடிதத்தை பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன் கடந்த 26ஆம் தேதி நம் நாட்டின் 73வது குடியரசு தினத்தை கொண்டாடிய சமயத்தில் கூட்டாட்சி மற்றும் சமூக நீதி கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள் குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனை உள்ள தனிநபர்கள், உள்ளிட்ட அனைவரையும் ஒரு பொதுவான குடையின் கீழ் ஒன்றிணைத்து அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு ஒன்றை ஆரம்பிக்கயிருப்பதாக அறிவித்தேன்.

அனைவருக்கும், அனைத்து,ம் என்பதை அடிப்படையாகக் வந்ததுதான் சமூகநீதி, சமூகநீதி என்பது எல்லோருக்கும் சமமான பொருளாதார அரசியல் சமூக உரிமைகளும், வாய்ப்புகளும், அமைய வேண்டும் என்ற எண்ணம்தான். எல்லோருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்வதன் மூலமாகத்தான் நம்முடைய அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஒவ்வொரு மாநிலத்திலும் வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படுவதற்காக ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். நாட்டில் சமூகநீதி கருத்தியலை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டத்தை வார்த்தெடுப்பதற்கும், இன்னும் சிறப்பாக செயல்படக்கூடிய பகுதிகளை கண்டறிவதற்கும், எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான தலமாக இந்த கூட்டமைப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே தங்களுடைய அமைப்பிலிருந்து இந்த அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளை நியமிக்குமாறு அக்கறையுடன் கோருகின்றேன். ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான பொருள் பொதிந்த சமூக நீதி சென்றடைய நாம் ஒன்றாக இணைந்திருந்தால் தான் முடியும் என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்.

சமூக நீதியில் பல நூற்றாண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்திற்கு பிற்போக்கு சக்திகள் சவால்விடும் இந்த காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதி செய்ய முற்போக்கு ஆற்றல் ஒன்றாக இணைய வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். இந்த முன்னெடுப்பில் எங்களுடன் நீங்களும் இணைய உங்களை வரவேற்க நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.