எதிர்க்கட்சியினர் வீடுகளை கூட விடக்கூடாது; முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுகவினருக்கு போட்ட ஆர்டர்!

0
95

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகளில் திமுக மும்மரம் காட்டி வருகின்றது. ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் வீடு தோறும் சென்று உறுப்பினர்களை சேர்ப்பதும், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட செயலாளர், தொகுதி பார்வையாளர்கள், அணி செயலாளர்களுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில் ஓரணியில் தமிழ்நாடு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கை முயற்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் மன்மொழி மானம் காப்பதற்கான அனைவரையும் ஒரே அணியில் திரட்டும் முயற்சியாக பார்க்க வேண்டும். அதனால் சாதி, மதம், கட்சி சார்பு என்று எந்த ஒரு வேறுபாடும் பார்க்காமல் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு இழைக்கப்படக்கூடிய அநீதிக்கு எதிராக மக்களை ஒன்று சேர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். மேலும் ஓரணியில் தமிழ்நாடு தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி முதல் நான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை அறிவிப்பேன்.

38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் இது குறித்து செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். அதன் பிறகு ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டங்களை ஒவ்வொரு மாவட்ட கழகத்திலும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜூலை மூன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக எதிர்க்கட்சியினர் வீடுகளுக்கும் நேரில் சென்று பேச வேண்டும். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டும் இல்லாமல் அனைவரையும் ஒன்று இணைக்கும் பணி என ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleபோதை பொருள் விவகாரம்; நடிகர்களுக்கு சப்போர்ட் செய்யும் சீமான்!
Next articleராமதாஸ் குழந்தையா? அப்போ குழந்தை அறிவித்த தலைவர் பதவி மட்டும் செல்லுமா? அருள் கிடுக்குப்பிடி கேள்வி