TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும், தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் வெவ்வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.
இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜய்யை தொடர்ந்து, செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2026 தேர்தலில் விஜய் ஆட்சியமைப்பார் என்று உறுதி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மூத்த தலைவரான எம்ஜிஆர் என்னை பல முறை அழைத்து பாராட்டி இருக்கிறார். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா உடன் இணைந்து பணியாற்றினேன். அதன் பிறகு, அதிமுக சிதறுண்டது. அதனை சரி செய்ய வேண்டுமேன நினைத்தேன்.
ஆனால் இது நிராகரிக்கப்பட்டது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், விஜய் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் வேண்டும், தூய்மையான ஆட்சியை மக்கள் எதிர் பார்க்கிறார்கள் என்றும் கூறினார். திமுக, அதிமுகவிற்கு மாறாக இன்னொரு ஆட்சி மலர வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். குழந்தைகளும் விஜய்யின் ஆதரவாளர்கள் தான் என்று கூறினார். இவரின் இந்த கருத்து அங்கு இருந்தவர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது.

