TVK ADMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகளும் பெரிய கட்சிகளும் மக்களை சந்திக்கும் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் புதிதாக உதயமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் 2 மாபெரும் மாநாடுகளையும், 5 பிரச்சார பயணத்தையும் முடித்துள்ளது. கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக 41 உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனால் தவெகவில் தலைவன் தொடங்கி தொண்டன் வரை அனைவரும் முடங்கி இருந்தனர். இதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு முன்பு புதுவையில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், அதில் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார்.
இந்நிலையில், நாளை ஈரோடு மாவட்டத்தில் தவெக பிரச்சாரம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மக்கள் மத்தியில் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களும் இணையும் நிகழ்வு நடைபெறும் என்று கணிக்கப்படுகிறது. அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், அதிருப்தி அமைச்சர்கள் பலரும் தவெகவில் இணைவார்கள் என்று கூறினார். ஆனால் அது, எங்கு, எப்போது என்பது குறித்த விவரம் சஸ்பென்ஸாகவே இருந்தது.
அந்த வகையில், ஓபிஎஸ்யின் ஆதரவாளரான வைத்தியலிங்கத்திடம் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இவர் நாளை தவெகவில் இணைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஜே.டி.சி பிரபாகரனும் இணைய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர்களை தொடர்ந்து அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட சசிகலாவும் நாளை விஜய் முன்னிலையில் தவெகவில் ஐக்கியமாக போவதாக பலரும் கூறுகின்றனர். இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது தவறான முடிவு என சசிகலா கூறிய நிலையில், அவர் தவெகவில் இணைவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.