தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன கூட்டுறவுத்துறை அமைச்சர்!

0
91

கடந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் தமிழக கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரையில் நகை அடகு வைத்திருக்கும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அப்போது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இப்படி 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் ஸ்டாலின்.ஆனால் தற்போது வரையில் எந்த ஒரு வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள்.

பெண்களுக்கான இலவச பயணத்திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது போக்குவரத்துதுறை மிகவும் நலிவுற்றிருப்பதால் அந்த அறிவிப்பும் விரைவில் திரும்ப பெறப்படலாம் என்ற செய்தியும் உலா வந்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசின் அறிவிப்பினடிப்படையில் 48 லட்சம் நகை கடன் வாங்கியதில் 13 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் 5 சவரனுக்கு பெற்று நகை கடன் வைத்த 22. 52 லட்சம் நபர்களில் 10.18 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தற்போது வரையில் பயனாளிகளின் விபரம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சிகள் நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு என்னவாயிற்று? என்று பிரச்சாரம் செய்தார்கள்.

தேர்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் காரணமாக, இந்தத் திட்டத்தை செயல்படுத்த இயலாது என்றும் கூட்டுறவுத் துறை அறிவித்திருந்தது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்ததை அடுத்து தேர்தல் விதிகளும் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன . இந்த சூழ்நிலையில், மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி அனைத்து பகுதிகளிலும் தற்சமயம் நகை கடன் தள்ளுபடி வழங்கி வருகின்றோம் என தெரிவித்திருக்கிறார்.