ADMK BJP:அதிமுக-பாஜக இடையிலான சீட் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவின் உள்ளகத்தில் அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிமுகவின் பாரம்பரிய பகுதிகள் என கருதப்படும் மேற்கு மாவட்டங்களில் பாஜக அதிக தொகுதிகளை கேட்பது, எடப்பாடி பழனிசாமிக்கு சவாலாக மாறியுள்ளது.
குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகள், பாஜகவிற்கு அதிக இடங்களை ஒதுக்குவது குறித்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கட்சியின் வலுவான வாக்கு வங்கியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்தால் அதிமுகவின் நிலை ஆபத்தாகும் என்ற கருத்து நிலவுகிறது.
இந்நிலையில் பாஜகவுடன் நெருக்கத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும், மத்திய அரசின் ஆதரவைப் பெறுவதற்கும், சட்டமன்றத் தேர்தலில் சவால்களை சமாளிப்பதற்கும் பாஜகவின் கோரிக்கைக்கு இ.பி.எஸ் சம்மதிப்பார் என்ற கருத்தும் நிலவுகிறது. மறுபுறம், கட்சியின் பாரம்பரிய கோட்டைகளை விட்டுக் கொடுக்கும் போது, அது எடப்பாடிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அவசியம் என்று யோசிக்கிறார், ஆனால் கட்சியின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படும் அளவுக்கு அதிக சீட்டுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டணியை காக்க வேண்டுமா? அல்லது அதிமுகவின் வலுவான அடித்தளத்தை பாதுகாக்க வேண்டுமா? என்ற பிரச்சினையை எதிர்கொள்கிறார். எடப்பாடி எடுக்கும் இறுதி முடிவு தான் கூட்டணியியையும், அதிமுகவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.