TVK ADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அயராது உழைத்து வருகின்றன. அதிமுக, திமுக, தவெக, நாதக என கட்சிகளனைத்தும் வெற்றி வியூகங்களை வகுத்து வரும் வேளையில், அரசியல் அரங்கில் பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்த வரிசையில் முதலிடம் பிடித்திருப்பது விஜய் என்றே சொல்லலாம். நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததிலிருந்தே அவருக்கான ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் மக்கள் சந்திப்பில் தீவிரம் காட்டிய விஜய், கரூர் சம்பவத்தினால் 1 மாத காலம் முடங்கி இருந்தார்.
இதன் பின்னர், தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் வாயிலாக அக்கட்சி மீண்டும் உயிர்பெற்றது. இதனை தொடர்ந்து புதுவையில் பரப்புரை செய்த விஜய், மீண்டும் மக்கள் சந்திப்பை துரிதப்படுத்தினார். மேலும் இரு தினங்களுக்கு முன்பு, தவெக நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளரான செங்கோட்டையனின் கோட்டையான ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். இவ்வாறு படிப்படியாக கட்சி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த விஜய், அடுத்ததாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் வரும் 30 ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ள போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததிலிருந்தே அதிமுகவின் கோட்டையை தவெக பக்கம் ஈர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளார். இதன் காரணமாக சேலத்தில் நடைபெற போகும் பிரச்சாரமும் செங்கோட்டையன் ஏற்பாடாக தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. சேலம் இபிஎஸ்யின் சொந்த ஊர் என்பதால், விஜய்யின் இந்த வருகை சேலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், திமுகவை அரசியல் எதிரி என்று கூறிய விஜய், திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பர் என்றும், செங்கோட்டையன் வருகையாலும், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினையாலும் கொங்கு மண்டலத்தில் அதிமுக வாக்குகளை சேகரிப்பார் என்று யூகிக்கப்படுகிறது.