TVK: தவெக சார்பில் கரூரில் நடந்த பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தமிழக அரசு தனி நபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபியை விசாரணைக்கு கைமாற்ற வேண்டுமென கேட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், தவெக தலைவர் விஜய் மீதும், மக்களை மீட்காமலும், சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் உள்ள தவெகவின் செயலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு, சம்பவம் நடந்த போது அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் அங்கு இருந்த போது, ஏன் தவெகவை சேர்ந்த ஒருவர் கூட அங்கு இல்லை என்ற கேள்வியையும் முன் வைத்தார்.
மேலும் விஜய்யால் அங்கு வர முடியவில்லை என்றாலும், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி இருக்க வேண்டும். இப்படி பட்ட கட்சி எவ்வாறு தமிழ்நாட்டை பாதுகாக்க போகிறது என்றும், தவெக தலைவர் விஜய்யிடம் தலைமைத்துவ பண்பே இல்லையென்றும் கூறினார்.
தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்ததை குறித்து பேசிய அவர், ஏன் அவர் மீதும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறிர்கள் என்றும், எல்லாவற்றையும் நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் தான் செய்ய வேண்டுமா என்ற கேள்வியையும் முன் வைத்தார்.