TVK CONGRESS: பீகாரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென மிக தீவிரமாக உள்ளது. பீகாரின் தேர்தல் முடிவுக்கு முன்பு வரை திமுக தலைமையிடம் சில கோரிக்கைகளை முன்வைத்த காங்கிரஸ், தேர்தல் முடிவுக்கு பின் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுகவிடம் பேச காங்கிரஸ் மேலிடம் ஐவர் குழுவை நியமித்துள்ளது. இந்த குழு 2026 தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும், தொகுதிகள் குறித்தும் திமுகவிடம் கலந்தாலோசிக்கும்.
காங்கிரசின் முக்கிய தலைவர்கள் விஜய்க்கு நெருக்கம் என்பதால் இந்த இரண்டு கட்சியும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது இதனை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்களின் நடவடிக்கைகளும் இருந்தது. இன்னும் சில தலைவர்கள் விஜய்யுடன் கூட்டணி இல்லை என்ற முடிவிலே அவர்களது கருத்தை கூறி வந்தனர். இதனால் இது இரு தலை பட்சமாகவே இருந்து வந்தது. தற்போது அதற்கு ஒரு முடிவு கிடைத்தது போல தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு கருத்தை கூறியுள்ளார்.
காங்கிரஸின் கூட்டணி நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக தலைவருடன் ஒரு வாரத்தில் பேச்சு வார்த்தை நடத்துவோம். அவர் அமைக்கும் குழுவுடன், காங்கிரஸ் குழுவும் பேசும். கூட்டணிக்கான சந்தேகங்கள், தொகுதி பங்கீடு குறித்த கேள்விகளை அப்போது தெளிவுப்படுத்துவோம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, 2026 தேர்தலிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, இதெல்லாம் முன்கூட்டியே சொல்லக்கூடிய விசியம் இல்லை.
பேச்சுவார்த்தை முடிந்த பிறகே தலைவர் முடிவை தெரிவிப்பார் என்று பதிலளித்தார். இவரின் இந்த பதில், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறு வெளியேறினால் நிச்சயம் இந்த கட்சி விஜய்யுடன் தான் கூட்டணி அமைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும், செல்வபெருந்தகையின் கூற்று காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விஜய்யுடன் இணைவதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறது.

