TVK ADMK: 2026 தேர்தலை கருத்தில் கொண்டு மாநில கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் பீகாரில் படுதோல்வி அடைந்ததன் விளைவாக தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது. இதனால், திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழு நேற்று ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே செல்வப்பெருந்தகை கூறினார். மேலும் திமுக தொகுதி பங்கீடு குறித்து பேச ஒரு குழு அமைத்த உடன், காங்கிரஸ் குழு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளதை தெளிவுபடுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் விஜய்யுடன் மிகவும் நெருக்கம் என்பதால் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
காங்கிரஸ் இருக்கும் தைரியத்தில் பாஜக, அதிமுக கூட்டணியை விஜய் உதறி தள்ளினார். கடைசியில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தற்போது காங்கிரஸ் திமுக பக்கம் சென்றதால் விஜய்க்கு இருக்கும் ஒரே வழி அதிமுக தான். ஆனால் முதல்வர் நாற்காலியை விட்டுத்தர இபிஎஸ் மறுப்பதால், விஜய் அவரது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வருவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி உருவானதால் தவெக அதிமுக வசம் தான் வந்தாக வேண்டும் என்ற கொண்டாட்டத்தில் இபிஎஸ் உள்ளார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

