ADMK: அதிமுக-வில் ஜெயலலிதா இறந்ததிலிருந்தே பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கட்சியும் பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. இதற்கு காரணம் இ.பி.எஸ்-யின் தலைமையும், கட்சியின் மூத்த அதிகரிகளை அவர் ஒதுக்கி வைத்ததுமே என்று சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் வேண்டுகோளை மறுத்த இ.பி.எஸ் அவரை பதவியிலிருந்து நீக்கி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதிமுக 5 அணிகளாக பிரிந்திருப்பதை எதிர் கட்சிகளும் அதிமுக நிர்வாகிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவரான சி.வி. சண்முகம் அவர்களும் பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும், தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் ஒருமைப்பாடு அவசியம் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் சசிகலா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது இ.பி.எஸ்-க்கு புதிய அழுத்தமாக உருவாகியுள்ளது. சசிகலா மீண்டும் அதிமுக-வில் சேர்வதை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது. “சசிகலா-விற்கு இடமில்லை” என்று இ.பி.எஸ் பலமுறை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சசிகலா மீண்டும் இணைந்தால் அதனால் கட்சி பலப்படும் என்று சிலர் கூற, மற்றொரு புறம் அது இ.பி.எஸ்-யின் தலைமையை பாதிக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியின் ஒற்றுமையை நிலை நிறுத்துவாரா? இல்லை வெளியேறிய தலைவர்களை மீண்டும் இணைக்க கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.