சர்ச்சையை ஏற்படுத்தும் டீப் ஃபேக் வீடியோ! கூகுள் எடுத்த அதிரடி முடிவு
தற்பொழுது இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையாக பேசப்பட்டு வரும் டீப் பேக் வீடியோக்களை தடுக்க கூகுள் நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்களின் புகைப்படத்தை அதிநவீன டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோவாக சித்தரித்து மர்மநபர்கள் இணையத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ உண்மையானது அல்ல என்றும் டீப் ஃபேக் வீடியோ என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் கூறினார். இதையடுத்து இந்த டீப் ஃபேக் வீடியோ சர்ச்சை மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் பேசப்பட்டது.
நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்களை தொடர்ந்து மேலும் ஒரு சிலருக்கு இந்த டீப் ஃபேக் வீடியோ சர்ச்சை நடந்துள்ளது. சமீபத்தில் நடிகை ஆலியா பட் அவர்களின் புகைப்படம் கூட இந்த முறையில் எடிட் செய்யப்பட்டு இணையத்தில் பரவியது. இந்நிலையில் இந்த டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கும் வகையில் சமூக வலைதள நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் தற்பொழுது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
டீப் ஃபேக் வீடியோ தொழில்நுட்பம் தொடர்பாக கூகுள் நிறுவனம் “இனிமேல் யூடியூப் தளத்தில் அப்லோடு செய்யப்படும் வீடியோக்களில் உண்மைத் தன்மை இருக்கின்றதா அல்லது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வீடியோவின் முகப்பில் அல்லது தொடக்கத்தில் கூற வேண்டும். ஏ.ஐ(AI) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி இருந்தாலும் அதையும் வீடியோவின் தொடக்கத்தில் அல்லது முகப்பில் பதிவி வேண்டும்.
இந்த புதிய விதிகள் அனைத்தும் யூடியூப் தளத்தில் வீடியோ பதிவிடும் கலைஞர்களுக்கு கூகுள் தெளிவாக எடுத்துரைக்கும். இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் கூகுள் செயல்படவுள்ளது.
இதற்கு என்று தனியாக இந்திய நாட்டில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையத்தை கூகுள் நிறுவனம் தொடங்கவுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப மையத்தை மெட்ராஸ் ஐஐடி உடன் இணைந்து தொடங்குவதற்கு கூகுள் நிறுவனம் 1 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.