செல்போன்கள் ஒட்டு கேட்டதாக எழுந்த சர்ச்சை! மத்திய அரசு கூறிய பதில்!
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தில் சாப்ட்வேர் மூலம் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ், கார்டியன் உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ ஹங்கேரி, பக்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்களுக்கான எண்களும் பட்டியலில் உள்ளன.
இதில் இரண்டு அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள் 40க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், மற்றும் ஒரு நீதிபதி ஆகியோரின் எண்களும் அடக்கம். சமூக ஆர்வலர்களின் எண்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த எண்கள் வேவு பார்க்கப்பட்ட என்பதை உறுதிப்படுத்த ஆய்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கிலேயே சாஃப்ட்வேர் விற்பனை என இஸ்ரேல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதே வேளையில் செல்போன்கள் வேவு பார்ப்பதாக வந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு கடந்த காலங்களிலும், இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்பதால் அது காக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. என்றும் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டை அரசு நிறுவனங்களை களங்கப் படுத்தும் நோக்கில் எழுப்பப்பட்டு இருப்பதாகவும், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ள போதிலும் நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.